‘The Goat Life’ – ஆடு ஜீவிதம்  – விமர்சனம்!

எழுத்தாளர் பென்யமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ என்ற மலையாள மொழி நாவலைத் தழுவி, அதே பெயரில் எடுக்கப்பட்டுள்ளத்  திரைப்படம். பிருத்விராஜ் சுகுமாறன், அமலாபால், கே ஆர் கோகுல், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன்- லூயிஸ், ஓமன் நாட்டு நடிகர் தலிப் அல் பலுஷி உள்ளிட்டவர்கள் நடித்திருக்க, இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கியிருக்கும் படம். இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பினை உருவாக்கியிருந்த ஆடு ஜீவிதம் எப்படி இருக்கிறது?

படிப்பறிவு பெரிதாக இல்லாத கேரள, தமிழ்நாட்டில் வசிக்கும் ஆண்களின் உட்சபச்ச கனவு என்பது, எப்படியாவது சௌதி அரேபிய நாடுகளுக்கு சென்று சம்பாதிக்க வேண்டும். அந்த பணத்தினை கொண்டு ஒரு வீடு என்பதே. இதற்காக தங்களுக்கு சொந்தமான சொத்தினை விற்றோ, கடன் வாங்கியோ செல்லத் தயங்காதவர்கள்.

இப்படியான சூழலில், நாயகன் பிருத்விராஜ், அவருடைய ஊருக்கு அருகே வசிக்கும் கே ஆர் கோகுல் இருவரும் சவுதிக்கு செல்கிறார்கள். விமான நிலையத்தில் இறங்கியதும் அவர்களை அழைத்துச்செல்ல வேண்டிய ஸ்பான்சர் வராததால், மற்றொரு அரபியான தலிப் அல் பலுஷியின் கட்டுப்பாட்டுக்குள் பலவந்தமாக இழுத்துச்செல்லப்படுகின்றனர். மொழி தெரியாத சூழலில் அவருடன் செல்பவர்கள், பாலைவனத்தில் வெவ்வேறு இடங்களில் ஆடு மேய்க்கும் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

புரியாத மொழி, விருப்பமில்லாத வேலை எனத் தடுமாறும் பிரித்விராஜ், துன்புறுத்தப்பட்டு, பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலையில் திணிக்கப்படுகிறார். மொழி தெரியாத ஊரில் வழி தெரியாது தவிக்கும் அவர், தான் அடிமையாக்கப்பட்டதை அறிந்து துடிக்கிறார். பிரித்விராஜ் ஒரு முறை தப்பிச்செல்லும் போது மாட்டிக்கொள்துடன் கடுமையாக தாக்கப்படுகிறார். அதன்பிறகு, தப்பிச்செல்ல எந்த வழியும் இல்லாத சூழலை புரிந்து கொண்டு, அந்த சூழலுக்குத் தன்னை பழக்கிக் கொள்கிறார்.

இப்படியான சூழலில், ஜிம்மி ஜீன்- லூயிஸ்ன் நட்பினை பெற்ற கே ஆர் கோகுல், பிரித்விராஜை சந்திக்கிறார். அப்போது மூவரும் அங்கிருந்து தப்பிச்செல்ல திட்டமிடுகின்றனர். அவர்கள் அங்கிருந்து தப்பினார்களா, இல்லையா? என்பதை பதை பதைக்க வைக்கும் திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிளெஸ்ஸி.

நாயகனாக நடித்திருக்கும் பிரித்விராஜின் கடுமையான உழைப்பு, ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. மாறுபட்ட உடலமைப்புகளோடு, நஜீப்பின் வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறார். ஒட்டிய வயிறுடன் அவர் தோன்றும் காட்சிகள், கண்களில் நீர் கசியச்செய்கிறது. அவர் நடித்த படங்களிலேயே, சிறந்த நடிகராக இந்தப்படத்தில் தோன்றியிருக்கிறார்.

குறைவான காட்சிகளில் நடித்திருக்கும் அமலா பால், அவரது வசீகர கவர்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதினை கொள்ளை கொள்கிறார்.

மற்றபடி, ஆர்.கோகுல்,  ஜிம்மி ஜூன் லூயிஸ், தலிப் அல் பலுஷி ஆகியோர் குறிப்பிடும்படி நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் சுனில்.கே.எஸ், ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. பாலைவனத்தின் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், படத்தின் நீளத்தினை குறைத்திருக்கலாம். குறைப்பதற்கு வாய்ப்புகள் இருந்தபோதும் அதை செய்யவில்லை!

படத்தின் பலவீனமாக தெரிவது ரசிகருக்கும் படத்திற்குமான நெருக்கம். உணர்வுப்பூர்வமாக பார்வையாளர்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, என்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம்!

பாலைவன நரகத்தின் பிடியிலிருந்து தப்பித்த நஜீப்பின் வாழ்க்கையினை, உணர்வு பூர்வமாக சொல்வதில் தவறியிருக்கிறார், இயக்குநர் பிளெஸ்ஸி.