சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து, கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், ரவீனா டான்டன் மற்றும் மனிஷா கொய்ராலா நடித்து, கடந்த 2001-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஆளவந்தான்’. இந்தப்படம், டிசம்பர் 8-ம் தேதி ரீ – ரிலீஸ் செய்யப்பட்டது.
ஆளவந்தான் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட நிலையில், இப்படத்தின் 50 நிமிடங்கள் எடிட் செய்யப்பட்டு வெளியானது, குறிப்பிடத்தக்கது. காஷ்மீரில் நடக்கும் ராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட சில காட்சிகள் இதில் அடங்கும்.
ஆளவந்தான் வெளியான சில நாட்களில், அதாவது முதல் மூன்று நாட்களில், தமிழகத்தில் மட்டும் ரூ.15 லட்சம் மேல் வசூலித்துள்ளது, குறிப்பிடத்தக்கது. இதுவரை, ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில், இதன் வசூல், சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆளவந்தான் படத்துடன் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினிகாந்தின் முத்து படம், முதன் மூன்று நாட்களில் சுமார் 7 லட்சம் வரை வசூலாகி இருக்கிறது. இது கமல் – ரஜினி ரசிகர்களிடையே பெரும் விவாதத்தினை உருவாக்கியிருக்கிறது!
கமல்ஹாசன், எத்தனையோ படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தாலும் ஆளவந்தான் என்றைக்குமே ஸ்பெஷல் தான்! முற்றிலும் மாறுபட்ட, நடிப்பிலும் உடல் அளவிலும் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அவர் நடித்திருப்பது, ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலகினருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் பாம்பு டாட்டுவுடன் சின்ன டான்ஸ் மூவ்மென்ட்டுடன் ‘நந்து’ கமல்ஹாசன் செய்யும் அட்ராசிட்டி காட்சியில், தியேட்டரில் க்ளாப்ஸ் பறக்கிறது!
சுமார், 24 வருடங்களுக்கு முன்பு வெளியான ஆளவந்தான் படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் இந்த படத்தை, புதுப்படத்தை பார்ப்பது போல் கமல் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எல்லாவற்றிற்கும் முக்கியமாக 2k கிட்ஸ், மத்தியில் ‘ஆளவந்தான்’ படம் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. இது குறித்து சமூக வலை தளங்களில், குறிப்பாக நந்து கமல்ஹாசனின் உடல் குறித்தும், நடிப்பு குறித்தும் பரவாலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.