‘டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில், கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம், ஆண்பாவம் பொல்லாதது. இதில் ரியோ, மாளவிகா மனோஜ், ஆர்ஜே விக்னேஷ் காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர், ஏ. வெங்கடேஷ் , ராஜா ராணி பாண்டியன், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார்.
ரியோ ராஜுக்கும், மாளவிகாவுக்கும் அவர்களுடைய பெற்றோர்களின் விருப்பப்படி திருமணம் நடக்கிறது. மகிழ்ச்சியாக செல்லும் இவர்களது வாழ்க்கையில் ஈகோ குறுக்கிடுகிறது. இதன் காரணமாக இனிமேல் இருவரும் சேர்ந்து வாழமுடியாது. என்ற முடிவுக்கு வரும் மாளவிகா, விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். ஆனால் ரியோராஜுக்கு இதில் விருப்பமில்லை. இதன் பிறகு என்ன நடந்தது? இன்றைய சூழலில் வசிக்கும் இளம் தம்பதியினருக்கு, கலகலப்பாக சொல்லும் திரைப்படமே ஆண்பாவம் பொல்லாதது.
இளம் தலைமுறையினரின் சோசியல் மீடியா வாழ்க்கையை, முன்னிறுத்தியும், அவர்களுக்குள்ளான ஈகோவையும் இனைத்து, ரசிக்குமபடியான திரைக்கதை அமைத்திருக்கிறார், கலையரசன் தங்கவேல்.
நாயகன் நாயகியாக நடித்திருக்கும் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடைய நடிப்பு, படத்தின் பெரும் பலமாக இருக்கிறது. அழகான ஜோடி! இருவருக்குள்ளும் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகள், ரசிக்கும்படி இருக்கிறது.
வழக்கறிஞராக நடித்திருக்கும் விக்னேஷ்காந்த், வழக்கமான நகைச்சுவையோடு, செண்டிமெண்டாகவும் நடித்து கைதட்டல்களை பெறுகிறார். இவருடைய மனைவியாக நடித்திருக்கும் ஷீலாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஜென்சன் திவாகரின் காட்சிகள் அனைத்தும் வெடிச்சிரிப்பினை உருவாக்குகிறது.
சித்து குமாரின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.
படத்தில் இடம்பெற்ற காட்சிகள், இன்றைய தலைமுறையினரிடையே ஒத்துப்போகும் வகையில் இருப்பது படத்திற்கான கூடுதல் பலம். விவாகரத்து செய்யும் மனநிலையில் இருப்பவர்களை மனம் மாறச் செய்யும், இந்த ‘ஆண்பாவம் பொல்லாதது.’