‘888 புரொடக்ஷன் & செல்லுலாய்டு கிரியேஷன்ஸ்’ சார்பில், சஜித் கிருஷ்ணன் தயாரித்து, மாதவ் ராமதாசன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், ஆழி. இதில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகஜித்,தேவிகா சதீஷ், வையாபுரி , தாமரைச்செல்வி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஸ் பாபு, பிஜு மாவுங்கள் வர்கீஸ், தீனா பாட்டியா, நிகில் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஆனந்த் என். நாயர். பின்னணி இசையமைத்திருக்கிறார், வில்லியம் ஃப்ரான்ஸிஸ். பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார், ஜாசி கிப்ட்.
ஆழி, என்ற சுத்தமான தமிழ்ப் பெயரோடு, இந்த வாரம் வந்த படங்களில் தனிக்கவனம் பெறுகிறது, இப்படம். சரத்குமார் , இந்திரஜித் ஜெகஜித் இருவரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சரத்குமார், போட் மெக்கானிக் என்ற பெயரில், சட்டத்திற்கு புறம்பான ஆயுதங்கள், போதை பொருள் கடத்தல் போன்ற வேலைகளை செய்து வருகிறார். பணபலமிக்க இவரது ஒரே மகள், தேவிகா சதீஷ், கல்லூரியில் படித்து வருகிறார். அவர், கல்லூரியில் உடன் படிக்கும் ஏழை மாணவர், இந்திரஜித் ஜெகஜித்தை காதலித்து வருகிறார். இவர்களது காதல் விஷயம் சரத்குமாருக்கு தெரிய வருகிறது. இதனால், ஆத்திரமடையும் அவர், இந்திரஜித் ஜெகஜித்தை கடத்திக்கொண்டு போய் நடுக்கடலில் வைத்து சித்ரவதை செய்கிறார். அதிலிருந்து தப்பிக்க இந்திரஜித் ஜெகஜித், சரத்குமாருடன் சண்டையிடுகிறார். ஆனால், அவரால் எதிர்த்து சண்டையிட முடியவில்லை. குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் இந்திரஜித் ஜெகஜித்தின் கைகளை கட்டிப்போடுகிறார், சரத்குமார். இந்த சூழலில் சரத்குமாரும் உயிர் போகும் சூழலில் சிக்கிக் கொள்கிறார். இருவரும் உயிர்பிழைத்தனரா? என்பதே ஆழி படத்தின் மீதிக் கதை.
படம் முழுவதும் நடுக்கடலில் மிதக்கும் போட்’ டிலேயே நடக்கிறது. சரத்குமார் , இந்திரஜித் ஜெகஜித் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சிகள், இருவருமே உயிருக்கு போராடும் காட்சிகள், சரத்குமாரை காப்பாற்ற துடிக்கும் நாய் காட்சிகள். இப்படி ஒரே போட்’ டுக்குள் அநேக காட்சிகள் நிகழ்வதாக இருந்தபோதும், பெரிதாக சலிப்பு தோன்றவில்லை. எப்படியாவது, இந்திரஜித் ஜெகஜித் தப்பிவிடமாட்டாரா? என்ற பரிதவிப்பு படம் பார்க்கும்போது ஏற்பட்டு விடுகிறது. க்ளைமாக்ஸ், மனதை கலங்கச்செய்து விடுகிறது.
மகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் தந்தையாக, முரட்டுத்தனமான போட் மெக்கானிக்காக நடித்திருக்கும் சரத்குமார் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அது போல், ஈவு இரக்கமின்றி மகளின் காதலனை தாக்கும் காட்சியிலும், க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் காட்டும் பரிதவிப்பும் தனிக்கவனம் பெறுகிறது.
சரத்குமார் மகளாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ், ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் மனம் நிறைகிறார். தேவிகா சதீஷை காதலிக்கும் இளைஞனாக இந்திரஜித் ஜெகஜித் சிறப்பாக நடித்து அந்த கதாபாத்திரத்தை உயர்த்திப்பிடிக்கிறார். காதலியின் பெயரையும், தனது பெயரையும் ரத்தத்தினால் எழுத, அதற்கு சரத்குமார் தனது நெஞ்சில் பச்சைக்குத்திய மகளின் பெயரை காட்டுவது நல்ல காட்சி.
வையாபுரி , தாமரைச்செல்வி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஸ் பாபு, பிஜு மாவுங்கள் வர்கீஸ், தீனா பாட்டியா, நிகில் முருகன் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஆனந்த் என்.நாயர், பின்னணி இசையமைப்பாளர் வில்லியம் ஃப்ரான்ஸிஸ், படத்தொகுப்பாளர் கே.ஸ்ரீநிவாஸ் ஆகியோர் படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கும் மாதவ் ராமதாசன், இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
‘ஆழி’ – வித்தியாசமான படம் பார்ப்பவர்களுக்கு.