‘பீட்சா-4’  படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது!

தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள ‘பீட்சா’ வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.

எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் நாசரின் மகனும் ‘கடாரம் கொண்டான்’ மற்றும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான அபி ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

இது குறித்து பேசிய தயாரிப்பாளர் சி. வி. குமார், “‘பீட்சா’ முதல் மூன்று பாகங்களின் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகத்தையும் தயாரிப்பது மிக்க மகிழ்ச்சி. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ‘பீட்சா’ வெற்றி பயணத்தை இப்படம் தக்க வைக்கும் என்று நம்புகிறேன். பொங்கலுக்குப் பின்னர் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “‘ராட்சசன்’, ‘மார்க் ஆண்டனி’ மற்றும் ‘சூது கவ்வும் 2’ உள்ளிட்ட படங்களின் திரைக்கதையில் பணியாற்றிய எஸ் ஜே அர்ஜுன் ‘பீட்சா 4’ திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். வலுவான குழு இப்படத்திற்காக இணைந்துள்ளது. இதன் இயக்குநர், இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்,” என்று தெரிவித்தார்.

‘பீட்சா 4’ திரைப்படத்தில் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அபி ஹாசன், “தயாரிப்பாளர் சி வி குமார் அவர்களை சிறு வயது முதலே தெரியும், அவரது படத்தில் முதல் முறையாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. தரமான கதைகளையும் திறமையுள்ள இளைஞர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து வரும் அவர் ‘பீட்சா 4’ திரைப்படத்திற்கு என்னை தேர்ந்தெடுத்தது சந்தோஷமாக உள்ளது,” என்றார்.

“‘பீட்சா’ முதல் மூன்று பாகங்களுக்கு நியாயம் செய்யும் வகையிலும், அதே சமயம் வழக்கமான திகில் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பு விருந்து படைக்கும் வகையில் ‘பீட்சா 4’ இருக்கும். படப்பிடிப்பு தொடங்குவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று அபி ஹாசன் கூறினார்.