நடிகர் சூரி பீதி! தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உற்சாகம்!

ஒரு சில திரைப்படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருக்கும். அந்த வகையில், இந்த வாரம் வெளியாகவுள்ள பத்து தல, விடுதலை ஆகிய திரைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் எந்தவிதமான எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது? என்பதை பார்க்கலாம்.

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை தழுவி, ‘விடுதலை’ என்ற பெயரில் திரைப்படமாக எழுதி இயக்கியிருக்கிறார், இயக்குநர் வெற்றிமாறன். ‘ஆர். எஸ். இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனத்தின் சார்பில், எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். காமெடி நடிகர் சூரி, முதல் முறையாக கதாநாயகனாக நடித்திருக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படம் வரும் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தில் நக்சல், கண்ணீரை வரவழைக்கும் போலீஸ் அட்டூழியம், என்கவுண்டர் போன்ற காட்சிகள் அதிகம் இருக்கிறது. விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானபோது பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை! ஆனால், இப்படத்திற்கான வரவேற்பு இருப்பதை போன்று விளம்பரப் படுத்தப்பட்டு வருகிறது.

விடுதலை படத்திற்கான வரவேற்பு குறித்து விநியோகஸ்தர்களிடமும், தியேட்டர் அதிபர்களிடமும் விசாரித்தபோது ‘முழுக்க முழுக்க விஜய்சேதுபதியின் மார்க்கெட்டை முன்னுறுத்தியே விடுதலை திரைப்படம் வியாபாரம் செய்யப்பட்டது. மிகப்பெரிய அளவில் காமெடியில் கலக்கிய வடிவேலு, சந்தானம் படங்களே தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், காமெடி நடிகர் சூரியை மக்கள் கதாநாயகனாக ஏற்றுக்கொள்வார்களா? என தெரியவில்லை! என்றனர்.

விடுதலை படம் குறித்து சூரி தனக்கு நெருக்கமான ஒரு பெண் பத்திரிக்கையாளரிடம், ரகசியமாக புலம்பியதாவது…

‘படத்தின் வெற்றி, தோல்வியை தாண்டி, இந்தப்படத்தில் உயிரை கொடுத்து நடித்திருக்கிறேன். இயக்குநர் வெற்றிமாறன் என்னை வேறுமாதிரி உருவாக்கியிருக்கிறார். என்னுடைய ஒரே பயம், ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்சேதுபதி அவருடைய நடிப்பின் மூலம் விஜய்யையே ஓரம் கட்டி விட்டார். என விமர்சகர்கள் அவரது நடிப்பினை பாராட்டி எழுதியிருந்தார்கள். இதில் அவரது கதாபாத்திரம் வலிமையானது தான். அவர் பேச்சை கேட்டு நான் மனம் மாறினேனா இல்லையா என்பது தான் க்ளைமாக்ஸ்!’ என தன்னுடைய நியாயமான பயத்தினை வெளிப்படுத்தி சூரி புலம்பியிருக்கிறார்.

ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும்  படம் ‘பத்து தல’. இப்படம் கன்னடத்தில் வெளியான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தினை ‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பில் ஞானவேல்ராஜா ‘பென் ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து தயாரித்துள்ளார்.

ஆக்‌ஷன் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படம் துவக்கத்திலிருந்தே மிகப் பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியிருந்தது. இப்படத்தின் ட்ரைலர் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையில், அண்மையில் வெளியான இப்படத்தின் ‘மறப்போமா’பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆடியன்ஸை திருப்தி படுத்தும் வகையில், நடிகை சாயீஷாவின் நடனத்தில் வெளியான ‘ராவடி’ பாடல் இளம் ரசிகர்களிடையே மேலும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

கலக்கலான கமர்ஷியலோடு பத்து தல படத்தில் அண்ணன் தங்கை சென்டிமென்ட், எஸ்டிஆர் – கௌதம் கார்த்திக் இடையிலான எமோஷனல், உள்ளிட்ட பெண்களை கவரும் காட்சிகளும் இருப்பது, இப்படத்தின் வெற்றிக்கான பலம்.

பத்து தல ஆடியோ வெளியீட்டு விழாவினை தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றியை தொடர்ந்து இந்தப்படமும் வெற்றி பெறும் என வியாபார வட்டங்களில் பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உற்சாகத்தில் இருந்து வருகிறார்.