‘வேலன்’ திரைப்படத்தை இயக்குநர் கவின் எழுதி இயக்கியுள்ளார், Skyman Films International சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். பிக்பாஸ் முகேன் நடிப்பில் வரவிருக்கும் இப்படத்தில் முகேன் உடன் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் இணைந்து நடித்துள்ளார்.
‘வேலன்’ திரைப்படம் குறித்து நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் கூறுகையில்..,
“ வேலன் திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் அழகான விதத்தில் சொன்னது தான். குடும்பத்துடன் இருக்கும்போது எப்போதுமே ஒருவர் சிறந்த நிம்மதியான மனநிலையுடன் சந்தோஷமாக இருப்பார்கள். இதை நான் ‘வேலன்’ குழுவுடன் பணிபுரியும் போது ஆத்மார்த்தமாக உணர்ந்தேன்.
பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில்தான் நடிகைகள் அதிக மதிப்பையும், கவனத்தையும் பெறுகிறார்கள் என்ற கருத்து இருந்தாலும், ‘குடும்ப படங்கள்’தான் அவர்களின் சிறப்பான குணாதியசத்தை வெளிப்படுத்துவதாக நான் நம்புகிறேன்.
குடும்பம் என்பது ஆண்கள் மற்றும் பெண்களின் பண்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று, அங்கு அவர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பு, ஆரோக்கியமான குடும்பத்திற்கு வழி வகுக்கும். அதேபோல், ஆண் மற்றும் பெண் நடிகர்கள் எப்போதும் குடும்ப திரைப்படங்களில் சமமான அளவில், முக்கிய கதாபாத்திரங்களைக் பெறுகிறார்கள்.
இந்த படத்தில் ஒரு அழகான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. முகேன் மிகவும் இனிமையான மனிதர். ஒரு ரசிகர் என்ற வகையில், இந்தக் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்தை, திரையரங்குகளில் காண ஆர்வமாக காத்திருக்கிறேன். குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் சொல்லும் அழகான படைப்பாக வேலன் இருக்கும்.