பிரபல நடன இயக்குநர் ரகுராமின் பேரக்குழந்தைகள் நடிகர்களாக அறிமுகமாகும் படத்தை சுஜா ரகுராம் மனோஜ் இயக்குகிறார்
பிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ். இவர் தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றுள்ளார். அத்துடன் கமல்ஹாசன், பிரபுதேவா, கலா, பிருந்தா மற்றும் பல்வேறு பிரபல நடன இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார்.
தொழிலதிபர் மனோஜ் வேணுகோபாலை மணந்த பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற சுஜா, அங்கு ஹாலிவுட் இயக்குநர்களான பென் & ஜூடி லெவின், பாயு பென்னட் மற்றும் டேனியல் லிர் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார்.
இவர், ரகுராமின் பேரக்குழந்தைகளான திரிஷுல் ஆர் மனோஜ், சனா மனோஜ் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாகும் படத்தினை தயாரித்து இயக்கவுள்ளார். இசையை மய்யமாக கொண்டு உருவாகவுள்ள இத்திரைப்படத்திற்கு ‘டேக் இட் ஈசி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார் சுஜா.
நட்பைப் பற்றிப் பேசும் இத்திரைப்படத்தில், சாம் சி எஸ் இசையமைத்து பென்னி தயாள் மற்றும் சனா மனோஜ் பாடியுள்ள ஒரு சிறப்பு பாடல் இடம்பெறுகிறது. திரிஷுல் ஆர் மனோஜ், சனா மனோஜ் மற்றும் நிகில் மகேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
திரைப்படத்துறையில் நுழைவதன் மூலம், கே சுப்பிரமணியம் அவர்களின் புகழ்மிக்க பாரம்பரியத்தை அவரது கொள்ளு பேரக்குழந்தைகள் தொடர்கிறார்கள்.