பள்ளி பருவத்தில் ஒரு தலைக் காதல், அதன் பின்னர் அடுக்கடுக்கான பிரச்சனைகள். இதனால் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கிறார், ஜிவி பிரகாஷ். அந்நேரத்தில், அவர் ஒருதலையாய் காதலித்த காதலி, கௌரி ஜி கிஷன் பாடும் பாடல் கேட்க, தனது தற்கொலை எண்ணத்தை மாற்றி கொள்கிறார். அவரிடம் எப்படியாவது தனது காதலை சொல்லிவிட நினைக்கும் ஜிவி பிரகாஷ், விபத்தில் சிக்கி சுய நினைவை இழக்கிறார்.
ஜிவி பிரகாஷ், கண் விழித்து பார்க்கும் போது சென்னை முற்றிலும் வேறுபட்டு காணப்படுகிறது. அதாவது, பனிப் பொழிவு, பறக்கும் தட்டுகள் என்பதோடு ஒரு தலையாய் காதலித்த கௌரி கிஷனே ஜிவி பிரகாஷூக்கு மனைவியாக இருக்கிறார். காதலியே மனைவியாக கிடைத்த சந்தோஷத்தில் குழப்பத்துடன் வாழ ஆரம்பிக்கும் நேரத்தில், அவர் இன்னொரு உலகத்திற்குள் வந்துவிடுகிறார். அங்கே, கௌரி கிஷனுக்கும், ஜிவி பிரகாஷின் நண்பனுக்கும் திருமணம் நடப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதனால் கடும் குழப்பமும், அதிர்ச்சியும் அடையும் ஜிவி பிரகாஷ், அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், அடியே படத்தின் ஜாலியான வித்தியாசமான அறிவியல் புனைவு கதை, திரைக்கதை.
கௌரி கிஷனை காதலிக்கும் பள்ளி மாணவனாகவும், இளைஞனாகவும் இருவேறு கதாபாத்திரங்களில் ஜிவி பிரகாஷ் குமார், சிறப்பாக நடித்திருக்கிறார். என்ன நடக்கிறது எனபதை யூகிக்க முடியாமல் குழம்பும் தருணத்திலும், வெங்கெட் பிரபுவிடம் கெஞ்சும் காட்சிகளிலும், ரசிகர்களின் மனம் நிறைகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் கெளரி கிஷன், பல காட்சிகளில் ஜிவி பிரகாஷை விட சிறப்பாக நடித்திருக்கிறார். அதோடு அவரது இளைமையும், அழகும் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறது. கௌரி கிஷன் இன்றைய இளைஞர்களின் கிரஷ்!
ஜிவி பிரகாஷின் நண்பராக வரும் ஆர்ஜே விஜய், தனது வழக்கமான நடிப்பின் மூலம் கலகலப்பூட்டுகிறார். கிரிக்கெட் வீரர்கள் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனுஸ் ஆகியோரை வைத்து அமைக்கப்பட்டிருக்கும் காமெடி, வேகப்பந்து வீச்சாளராக இயக்குநர் மணிரத்னம், கெளதம் மேனனாக வெங்கட் பிரபு, வாய் பேசமுடியாதவராக கூல் சுரேஷ், போன்ற காட்சிகளின் சித்தரிப்பு சிரிக்க வைக்கிறது.
திரும்பத் திரும்ப வரும் காட்சிகள் சலிப்பூட்டுகின்றன.
கோகுல் பினோய் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே!
கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், இன்னும் கொஞ்சம் தெளிவாக புரியும்படி சொல்லியிருக்கலாம்.
மொத்தத்தில், ‘அடியே’ இளைஞர்களுக்கான டைம் டிராவல் காதல்!