மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன் இணைந்து நடித்த திரைப்படம், ‘அடியே’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்தப் படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் ‘டா டா ‘ எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் கணேஷ் பாபு இயக்கவிருக்கிறார்.
அடியே படத்தின் வெற்றி குறித்து கௌரி ஜி. கிஷன் பகிர்ந்து கொண்டதாவது..
அடியே திரைப்படத்தில் எனது, செந்தாழினி கதாபாத்திரம். என் வயதுக்கு மீறியது. ஜானு என்ற கதாபாத்திரத்திற்கு பிறகு, அதைவிட அழுத்தமான செந்தாழினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். செந்தாழினி என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம். எனக்கு பிடித்த வேடமும் கூட. சில படங்களில் இரண்டு வேடங்களில் நடித்திருப்போம். ஆனால் எனக்கு இந்த படத்தில் பல வெர்சன்ஸ் இருந்தது. ஒரு நடிகையாக இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலானதாக இருந்தது. இந்த படத்தை பார்த்துவிட்டு, ‘ஜானுவை மறக்கடித்து விட்டீர்கள்’ என பாராட்டினர். இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின், தயாரிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும், சிம்பு தேவன் இயக்கத்தில், யோகி பாபு நடித்திருக்கும், ‘போட்’ எனும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன்.
அடியே படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், வித்தியாசமான சிந்தனையாளர். அவருடன் இணைந்து மற்றொரு படைப்பிலும் பணியாற்றி இருக்கிறேன். அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
அடியே திரைப்படம் தற்போது நான்காவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி வெற்றி பெறும் என நம்புகிறேன்.” என்றார்.