மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பேரலல்யுனிவெர்ஸ் மற்றும் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன்போது படத்தின் தயாரிப்பாளர் பிரேம்குமார், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார், நடிகை கௌரி ஜி. கிஷன், ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பாளர் முத்தையன், நடிகர் மதும்கேஷ் பிரேம் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
நாயகி கௌரி ஜி. கிஷன் பேசுகையில்,
‘அடியே என்னுடைய திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம். இந்த வாய்ப்பை அளித்ததற்காக மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது வித்தியாசமான படம். பேரலல்யுனிவெர்ஸ், ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் இந்தியாவில் இதுவரை இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதில்லை. இந்தப் படத்தின் கதை சிக்கலானது. ஆனால் பட தயாரிப்பு நிறுவனத்தின் முழுமையான ஒத்துழைப்பால், இப்படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறோம். இதற்காக அனைவருக்கும் நன்றி.
என் வாழ்க்கையில் எப்போதும் எதிர்பாராமல் தான் அனைத்தும் நடந்திருக்கிறது. 96 படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை போல்.. இந்த திரைப்படத்திலும் ஒரே ஒரு போன் கால் மூலம் கதையைக் கேட்டு, உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன். பொதுவாக கதைகளை கேட்டு பொறுமையாக தான் தேர்வு செய்து நடிப்பேன். ஆனால் அடியே படத்தின் கதையை முழுமையாக கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். அதற்கு மற்றொரு காரணம் ஜீ. வி. பிரகாஷ் குமார். அவருடைய இசைக்கு நான் ரசிகை. அவருடைய இசைக்கு அனைவரும் ரசிகர்கள் என்றாலும், இந்த படத்தில் அவருடைய நடிப்பு நன்றாக இருக்கும். அவருடன் இணைந்து நடித்தது மறக்க இயலாத வித்தியாசமான அனுபவம். இந்த படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயரில் பாடல் ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் என்னுடைய திரையுலக பயணத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். ஆகஸ்ட் 25ஆம் தேதி இப்படம் வெளியான பிறகு ரசிகர்களிடத்தில் என்னுடைய கதாபாத்திரம் பேசப்படும் என நம்புகிறேன்.