ஏலே – விமர்சனம்

இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘ஏலே’. நட்சத்திர தம்பதியினர் புஷ்கர் & காயத்ரி ‘Wall Watcher Films’ நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர்.

Y Not Studios மற்றும் Reliance Entertainment நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன.

அப்பா சமுத்திரக்கனி இறந்துவிட சொந்த ஊருக்கு வருகிறார், அவரது மகன் மணிகண்டன். ஊருக்கு வந்ததும் அப்பாவின் உடலைப் பார்த்து எந்தவிதமான பதட்டமோ, வருத்தமோ இல்லாமல் தனது அக்காவிடம் ‘வயிறு பசிக்குது சாப்பிட என்ன இருக்கு’ என கேட்கிறார்.

‘என்னடா இவன்..’ என நினைக்கும்போது அதற்கான காரணத்தை சற்று, சுவாரஷ்யமான திரைக்கதையில் விவரிக்கிறார், இயக்குனர் ஹலிதா ஷமீம்.

மனைவி இறந்துவிட்ட நிலையில் ‘முத்துகுட்டி’ என்ற சமுத்திரக்கனி மகளையும், மகனையும் வளர்த்து வருகிறார்.

ஊர், ஊராகச் சென்று குச்சி ஐஸ் விற்பவர், அதில் வரும் வருமானத்தை சாராயம் குடிப்பதற்கும், லாட்டரி சீட்டு வாங்கவும் செலவிடுகிறார்.

குடிப்பதற்கு காசு இல்லாவிட்டால் கோழிக் குஞ்சுகளை பிடித்து நடுரோட்டில் வலுக்கட்டாயமாக மேயவிடுவார். அப்படி மேயும் போது வண்டியில் அடிபட்டு இறந்துவிட்டால் வண்டி ஓட்டுனர்களிடம் அலுச்சாட்டியம் செய்து கையில் இருக்கும் காசைப் பறித்துக்கொள்வார்.

காசுக்காக மகன் வைத்திருக்கும் பள்ளிப் பாட புத்தகத்தைக் கூட விற்றுவிடுவார். ‘இப்ப புரியுதா.. மகன் ஏன் அழுகவில்லையென்று?’ இதுபோல் இன்னும் பிற ‘டாகால்டி’ வேலைகளை எந்த உறுத்தலுமே இல்லாமல் செய்பவர்.

சமுத்திரக்கனியின் அப்பாவும், தாத்தாவும் வேற லெவல் ‘டகால்ட்டி’ங்க.. ‘படம் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும்’

திடீரென சமுத்திரக்கனியின் ‘பிணம்’ காணாமல் போகிறது. மகன் மணிகண்டன் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிறார். இதன் பின்னர் நடக்கும் சம்பவங்களே ‘ஏலே’ படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

‘முத்துகுட்டி’ என்ற கதாபாத்திரத்திற்கேற்ற தனிநடிப்பினால் அசத்தியுள்ளார் சமுத்திரக்கனி. ஒவ்வொரு காட்சியிலும் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார்.

மணிகண்டன் – மதுமதி இருவருக்குமான காதல் காட்சிகள் புதிதாக.. ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது.

ஒரு ஊதாரி தந்தையின் மகன் படும்பாட்டை கண்முன்னே நிறுத்துகிறார், மணிகண்டன். தேர்ந்த நல்ல நடிப்பு.

புதுமுகம் மதுமிதா,‘நாச்சியாள்’ கதாபாத்திரத்தை சிறப்பாக்கியுள்ளார்.

படத்தில் நடித்த நடிகர்கள், கிராமத்து மக்கள் என அனைவரும் ரசிக்கும்படி நடித்துள்ளனர்.

எழவு வீட்டில் கூலிக்கு மாரடிக்கும், ‘மாரடிப்பாட்டு’ பாடும் ஒருகிழவி ‘இன்னொரு எழவுக்கு போக வேண்டும் என்பதால்’ ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒப்பாரியை ஒலிபரப்பச் சொல்வது ஹைலைட் காமெடி!

படத்தின் மொத்த பலமும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு தான். பாடல் காட்சிகளுக்கான படப்பதிவு சூப்பர். பாடல், பின்னணி இசையில் பெரிதாக குறையில்லை.

முத்துக்குட்டி என்ற ஊதாரி, குடிகாரனின் அலுச்சாட்டியங்களை குறும்பாக காட்ட முயற்சித்திருப்பதும், க்ளைமாக்ஸில் புனிதனாக சித்தரிப்பதும் கருத்தியல் ரீதியாக கண்டனத்துக்குரியது.