தமிழ்-மலையாளத்தில் உருவாகும் ஹாரர் ‘ஆகாசகங்கா-2’

தமிழில் ‘காசி’ படம் மூலம் விக்ரமுக்குள் இருந்த இன்னும் அதிகப்படியான நடிப்புத்திறமையை வெளியே கொண்டுவந்தவர் மலையாள இயக்குநர் வினயன். கடந்த 3௦ வருடங்களாக மலையாளத்தில் பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இவர், என் மன வானில், அற்புத தீவு உள்ளிட்ட படங்களையும் தமிழில் இயக்கியுள்ளார்.

மறைந்த பிரபல நடிகர் கலாபவன் மணியின் வாழ்க்கை வரலாறாக இயக்குநர் வினயன் இயக்கிய ‘சாலாக்குடிக்காரன் சங்காதி’ என்கிற படம் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டானது. இப்படத்தில் கலாபவன் மணியாக நடித்து அறிமுகமான ராஜாமணி என்பவர் தற்போது மலையாளத்தில் பிஸியான கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அதிரடியான ஒரு ஹாரர் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைகிறார் இயக்குநர் வினயன். மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகிறது இந்தப்படம். 2௦௦௦ல் வினயன் இயக்கிய சூப்பர்ஹிட் ஹாரர் படமான ‘ஆகாசகங்கா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருக்கிறது. ஆகாசகங்கா வெளியான சமயத்தில் அந்தப்படம் மலையாள சினிமாவில் மிகப்பெரிய ட்ரெண்ட் செட்டர் படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து காமெடி கலந்த பல ஹாரர் படங்கள் உருவாக அது பாதை அமைத்துக் கொடுத்தது. இதே ஹாரர் பின்னணியில் 2௦௦5ல் இயக்குநர் வினயன் இயக்கிய வெள்ளி நட்சத்திரம் படமும் சூப்பர்ஹிட்டானது குறிப்பிடத்தக்கது..

‘ஆகாசகங்கா-2’ படத்தில் ஆசிப் அலி, சித்திக், சலீம்குமார், ஸ்ரீநாத் பாஷி, விஷ்ணு கோவிந்த், ஹரீஷ் கணரன், தர்மாஜன், ஆரதி என பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இரண்டாம் பாகமானது கிராஃபிக்ஸ் வேலைகளுடன் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் மிரட்டலாக உருவாக இருக்கிறது. பஹத் பாசில் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட பல படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த பிரபல இசையமைப்பாளர் பிஜிபால் இசையமைக்கிறார். பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் பிரகாஷ் குட்டி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

(ஏப்-16) இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. பாலக்காடு, கொச்சி மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.. தமிழ் மலையாளமாக இருமொழியில் உருவாகும் “ஆகாச கங்கா 2” ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக படம் வெளியாகவுள்ளது.