தமிழ் சினிமாவில் மாறுபட்ட புதுமையான கதைகளை ரசிகர்களுக்கு அளித்து வருகிறது S.R.பிரபுவின் Dream warrior Pictures. ‘அருவி, என் ஜி கே, கைதி’ படங்களின் வரிசையில் இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பாக, ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சர்வானந்த் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக் இயக்கத்தில் அம்மா பாசத்தை மையமாக வைத்து ஒரு சயின்ஸ் பிக்சன் படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது.
‘Happy to be single’ எனும் வெப் சீரிஸை இயக்கியதன் மூலம் புகழ் பெற்றவர் ஶ்ரீகார்த்திக். ‘கணம்’ படம் உருவாகிய விதம் குறித்து அவர் கூறியதாவது…
‘எனது தாயார் சமீபத்தில் மார்பக புற்றுநோயால் இறந்து விட அவரை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது. அந்த ‘கணம்’ உருவான கதை தான் இந்த ‘கணம்’.
இதை ஒரு சிறிய படமாக உருவாக்க வேண்டும் என்று நினைத்து, வித்தியாசமான கதைகளை தயாரிக்கும் தயாரிப்பாளர் SR பிரபு விடம் சொன்னேன். கதையின் அடுத்தடுத்த நிமிடங்கள் அவரை கலங்கடிக்க வைத்து விட்டது.’
கதையும் அதன் உணர்வுகள் பயணிக்கும் விதத்தையும் கேட்ட அவர், இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும். இதை பெரிய அளவில் உருவாக்குவோம் என்று, படத்தை பிரமாண்டமாக வடிவமைக்க தொடங்கினார்.
இப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் எடுக்கலாம் என திட்டமிட்ட பிறகு, ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சர்வானந்தை நடிக்கவைக்க முடிவு செய்யப்பட்டது. இப்படம் மூலம் சர்வானந்த் 10 வருடங்களுக்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார்.
படத்தின் மிக முக்கியமான அம்மா வேடத்தில், தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத கனவுக்கன்னியாக விளங்கிய அமலா நடித்துள்ளார். 25 வருடங்களாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை அமலா இப்படத்தின் திரைக்கதையால் ஈர்க்கப்பட்டு இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். என்றார் டைரக்டர் ஶ்ரீகார்த்திக்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அமலா, சர்வானந்த் முதன்மை பாத்திரங்களாக நடிக்கும் இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாக நடித்துள்ளார். சதீஷ் ரமேஷ் திலக் ஆகியோருடன் நாசர் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, சுஜித் சாரங்கால் ஒளிப்பதிவு செய்துள்ளார். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் ஃபேமிலி டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது, என்கிறார் கணம் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.