சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டில் இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் இசையமைப்பாளர் தேவா. பூச்சி முருகன், இயக்குநர் அமீர், இயக்குநர் இரா. சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார், நடிகர் கருணாஸ் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் அமீர் பேசுகையில்,
” பொதுவாக ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் போது, அந்த படக்குழுவினருடன் நமக்கு எந்த தொடர்பும் பெரிதாக இருக்காது. ஆனால் இந்தப்படத்தில் பணியாற்றியவர்களுக்கும், மேடையில் வீற்றிருப்பவர்களுக்கும் எனக்கும் நல்லதொரு புரிதலுடன் கூடிய தொடர்பு இருக்கிறது. இயக்குநர் ராம்நாத் அவருடைய முதல் படமான ‘திருநாள்’ படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நீங்கள்தான் நாயகனாக நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஒரு முதல் பட இயக்குநர் கதையை சொன்னாலும், அன்றைக்கு அதில் நடிக்க முடியாத ஒரு சூழல் இருந்தது. ‘ஆதார்’ படத்தின் கதையையும் என்னிடம் முதலில் சொன்னார். கதையைக் கேட்டதும் மிகவும் பிடித்திருந்தது. இந்தப்படத்திலும் நடிக்க முடியவில்லை.
இந்தப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தபோது நாம் இயக்குநர் ராம்நாத்தை தொடர்ந்து பரிசோதிக்கிறோமோ..! என்ற எண்ணம் ஏற்பட்டது. தற்போது அவரது இயக்கத்தில் கதையே கேட்காமல் நடிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகி இருக்கிறது.
அருண்பாண்டியன் பேசும்போது நிறைய புள்ளி விவரங்களை சொல்லிவிட்டு, தமிழ் சினிமா தற்போது பின் தங்கி இருக்கிறது என குறிப்பிட்டார். தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு படத்தின் பட்ஜெட்டில் 90% அல்லது 80% சம்பளமாக தருகிறார்கள். தர வேண்டியிருக்கிறது என சொன்னார். ஏன் கொடுக்கிறார்கள் என்பதை நான் கேட்கவில்லை. ஆனால் அவர் பேசும்போது ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். அதை தவறுதலாகத் தான் பயன்படுத்தியிருப்பார் என நினைக்கிறேன். ‘தமிழ் சினிமா எல்லா வகையிலும் பின் தங்கி இருக்கிறது’ என சொன்னார். இதை நான் ஏற்க மறுக்கிறேன். இந்தியாவிற்கே புதிய பாணியிலான சினிமாவைக் கற்றுக் கொடுத்தது தமிழ் சினிமா. ஒருநாளும் தமிழ் சினிமா பின் தங்காது. ‘ஆர் ஆர் ஆர்’, ‘கே ஜி எஃப்’ போன்ற படங்களை வைத்து தமிழ் சினிமாவை எடை போடாதீர்கள். ஏனென்றால் நாங்கள் அந்த காலத்திலேயே ‘சந்திரலேகா’ என்ற பிரமாண்டமான படைப்பை உருவாக்கி இருக்கிறோம். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘நாடோடி மன்னன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற படைப்புகளுக்கு நிகராக இதுவரை வேறு எந்த மொழிப் படங்களும் உருவாகவில்லை. சமூக படைப்புகளுக்கு இணையாகவோ எளிமையான படைப்புகளுக்கோ ஈடு இணை இல்லை. அதனால் தமிழ் சினிமா எப்போதும் இந்திய சினிமாவிற்கு முன்னோடி தான். ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப வணிக சினிமாவாக மாறும்போது மாற்றங்கள் ஏற்படும். ‘16 வயதினிலே’, ‘கிழக்கு சீமையிலே’ போன்ற படங்கள் வெளியான போதும், வணிக சினிமா இருந்திருக்கிறது. ஆனால் அவை ஒருபோதும் இவை வெளியாவதற்கு தடையாக இருந்ததில்லை என்பதை முக்கியமாக பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவில் பணியாற்றிய கலைஞர்கள் தான் இன்று வேற்று மொழிப்படங்களில் பணியாற்றுகிறார்கள். இயக்குநர் ராஜமவுலி அவர்களே ஆர் ஆர் ஆர் படத்தின் விளம்பர நிகழ்வில்,“ தமிழ்சினிமா எங்களது தாய்வீடு என்று சொல்லியிருக்கிறார்.. இங்கு கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்றும், எங்களுக்கு தமிழ்சினிமா பிரமிப்பை தருகிறது.” என்றும் சொன்னார். அதனால் தமிழ் சினிமாவில் முன்னேற்றத்திற்கு கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்கள் என்றைக்கும் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.
‘நந்தா’ படத்தில் காமெடி நடிகராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து நடிகர் கருணாசை எனக்குத் தெரியும். நகைச்சுவை நடிகராக வளர்ந்து, ஒரு அரசியல் கட்சியை தொடங்கி, அதன் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். பல்வேறு சமூக விசயங்களில் கலந்து கொண்டாலும் கருணாசின் முகத்திற்கு திரையில் குணச்சித்திர வேடத்திற்கு ஒரு வெள்ளந்தியான… ஒரு எதார்த்தமான மனிதருக்கு… அப்படியே நூறு சதம் பொருந்துவார். அது இந்த ‘ஆதார்’ படத்தில் முழுமையாக தெரிகிறது. இந்தப் படத்தில் மட்டுமல்ல ‘சங்க தலைவன்’ என்ற ஒரு படத்திலும் கருணாஸ் நடித்திருந்தார். அந்தப் படத்தை வெளியிட்ட வெற்றிமாறனிடம் படத்தை விளம்பரப்படுத்தும் போது, ‘கருணாசின் முகத்தையும் பெரிதாக இடம் பெற வையுங்கள். படம் ஓடும்’ என தெரிவித்தேன். அந்தப் படத்தில் கருணாஸ் பிரமாதமாக நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் நடிகர் நாகேஷிற்கு பிறகு மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர் கருணாஸ் தான். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.