திரை விமர்சகர்களின் தலையில் ‘குட்டு’ வைத்த இயக்குநர் அமீர்!

‘மதுரை முத்து மூவிஸ்’ மற்றும் ‘கனவு தொழிற்சாலை’ இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, பிரபல தியேட்டர் நிறுவனமான ‘PVR PICTURES’ நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

‘உயிர், ‘மிருகம்,’‘சிந்து சமவெளி’போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் சாமி. இவர் தற்போது ‘அக்கா குருவி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். உலகப்புகழ் பெற்ற பெர்ஸியன் திரைப்படமான ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ (Children of Heaven) என்ற திரைப்படத்தின் மறு உருவாக்கம் தான் இப்படம்.  இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படகுழுவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் பேசியபோது,

இந்த விழாவிற்கு நான் வந்ததன் காரணம் சாமி என்கின்ற படைப்பாளியை விட சாமி இயக்கியுள்ள படைப்பிற்காக வருவது தான் என்னுடைய முதல் நோக்கம். “Children of Heaven” என்ற திரைப்படம், உலகில் இருக்கக்கூடிய அனைத்து சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்ட ஒரு திரைப்படம். மஜித் மஜிதி என்ற இயக்குனர் உலகில் இருக்கக்கூடிய அனைத்து சினிமாவையும் தன் காலடியில் கொண்டு வந்து புரட்சி செய்த ஒரு இயக்குனர். Children of Heaven படத்தை பார்க்காதவர்கள் சினிமாவில் இல்லை. அனைவரும் பார்த்திருப்பார்கள்.

இந்த படத்தை பற்றி இசைஞானி இளையராஜா இது போன்ற படங்களை ஏன் இங்கு எடுப்பதில்லை என்று ஒரு கேள்வியை கேட்டார். அதில் சில சிக்கல்கள் உள்ளது, இது போன்ற நிறைய திரைப்படங்கள் உள்ளது. அதை எல்லாம் இயக்க வேண்டுமென்றால், இயக்குனரே கதை, வசனம், திரைக்கதை, போன்று என்னவெல்லாம் உள்ளதோ அது அனைத்தையும் பார்ப்பவராக இருக்க வேண்டும். அப்போது தான் தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தர தயாராகவுள்ளனர்.

இல்லை கதை வேறு ஒருவருடையது, இயக்கம் மட்டும் தான் நான் என்று சொன்னால், அதற்கு நான் எழுத்தாளரை வைத்தே இயக்கிவிடுவோமே தனியாக இயக்குனர்கள் எதற்கு? என்று இது போன்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

குறிப்பாக முதல் படம் இயக்கும் ஒரு இயக்குனருக்கு அந்த படம் வெற்றி அடைந்துவிட்டது என்று சொன்னால் அவர் அடுத்து எடுக்கும் படம் ரீமேக் படமாக இருந்தால் அதை யாரும் விரும்புவதில்லை. பத்திரிகையாளர்களே கேலிக்குரிய ஒரு விஷயமாக கிண்டலடித்து விடுகிறார்கள். ஆனால், அண்டை மாநிலமான தெலுங்கு, பிற மாநிலமான ஹிந்தி மொழி படங்கள் பெரிய ஹிட் மாஸ் ஹிட் என்று செய்தி வந்தால், அதே படத்தை இங்குள்ள ஒரு பெரிய ஹீரோவை வைத்து ரீமேக் செய்தால், அந்த படத்திற்கு கிடைக்கும் ஆதரவு, விளம்பரம், வரவேற்பு அனைத்தும் அதிகமாக இருக்கும். ஆனால், இது போன்ற கலைப் படங்களை இயக்குவது கத்தி மீது நடப்பது போல் இருக்கும். அந்த படத்தின் தரம் குறையாமல் நம் மண்ணின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு இயக்க வேண்டும். அதே படத்தை இயக்கி தோல்வியடைந்து விட்டால் இயக்குனர் பெரும் விமர்சனத்திற்கு ஆளாவார்கள்.

ஆரம்ப காலகட்டத்தில் இருந்து எனக்கு இது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமாக உள்ளது. பெயர் குறிப்பிடாமல் சொன்னால் தெலுங்கு மொழியில் சில்வர் ஜூபிலி வாங்கிய ஒரு படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். அந்த இயக்குனர் காட்சி மாறாமல் அப்படியே இயக்கியுள்ளார். ஆனால், அந்த படத்திற்கு பத்திரிகையில், இயக்குனர் மிக சிறப்பாக திரைக்கதை அமைத்துள்ளார் என்று எழுதியுள்ளனர். காட்சி மாறாமல் எடுத்த ரீமேக் படத்திற்கு கிடைத்த விமர்சனம் தான் இது. இது போன்ற விமர்சனங்களுக்கிடையில் இயக்குனர்கள் சிக்கிக் கொள்கிறோம் என்பதே நிதர்சனம்.

இளையராஜா அவர்கள் கேட்ட கேள்வி நியாயமான கேள்வி, இது சாமிக்கு மட்டுமல்ல பல இயக்குனர்களுக்கும் தோன்றியிருக்கும் எனக்கும் தோன்றியது. இந்த படத்தை இயக்குகிறோம் என்று சொன்னால் பருத்திவீரன் என்ற சொந்த ஊர் கதையை இயக்கிவிட்டோம். ராம் என்று சொந்த கதையை இயக்கிவிட்டோம். அது போன்ற படத்தை இயக்கிவிட்டு ஒரு ரீமேக் கதையை இயக்குவதா? என்று வியாபார ரீதியாக பயம் வருகிறது. இதை இயக்கினால் மார்க்கெட் இறங்கிவிடுமோ? மக்கள் மத்தியில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கேள்விகள் எழுகிறது. இங்கு கலர் சட்டை போட்டுக் கொண்டு விமர்சனம் செய்ய நிறைய பேர் உள்ளனர். அவர்களிடம் யார் சிக்குவது? பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவது? என்று பல சிரமங்கள் உள்ளது.

Children of Heaven போன்று 20க்கும் மேற்பட்ட படங்கள் ரீமேக் செய்வதற்கு தயாராக உள்ளது. ஆனால், இது போன்ற அச்சுறுத்தல்கள் தான் அதை தடுக்கிறது. ஆனால், அந்த வகையில், மனம் திருந்திய மைந்தனாக சாமி இருக்கிறார். அவரின் முந்தைய படங்கள் சர்ச்சைக்குரிய படங்களாக இருந்ததால் அவர் இந்த பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் சரியான பாதையை தேர்ந்தெடுத்தாரா என்பதை விட அவர் சரியான படத்தை தேர்வுசெய்துள்ளார் என்பதே மறுக்க முடியாத உண்மை.

இந்த படத்தை பார்த்துவிட்டு யாரும் குறை கூறவே முடியாது. இந்த படத்தை அவர் எவ்வளவு குறைவாக எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும் கூட அந்த படத்தின் தரம் குறையாது. ஏனென்றால், அந்த கதையின் கரு அப்படி. ஆனால் அவர் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளேன். கிளைமாக்ஸ் காட்சியில் சிறிய மாற்றம் செய்துள்ளேன் என்று தெரிவித்தார். அது கேட்பதற்கு நன்றாக இருந்தது. பார்ப்பதற்கும் நன்றாக தான் இருக்கும்.

மிக முக்கியமாக சொல்ல வேண்டிய விஷயம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வணிக ரீதியாக வெற்றியடைய வேண்டும் என்பது தான். இந்த படத்தில் பணியாற்றிய குழந்தைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இசைஞானி இளையராஜாவின் பாட்டை கேட்கும்போதே அவர் இப்படத்திற்காக என்ன செய்திருப்பார் என்று தெரிகிறது. முதல் முறை கேட்ட பாடலே எனக்குள் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது.

இதையெல்லாம் தாண்டி இசைஞானிக்கான அங்கீகாரம் என்னவென்றால், இயக்குனர் சாமி என்னிடம் ஒரு மின்னஞ்சலை காண்பித்தார். அதாவது இந்த விழாவிற்கு மஜித் மஜிதி வரவேண்டும் என்று ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளனர். ஆனால், அதற்கான செலவுகள் அதிகம் என்ற காரணத்தால் படக்குழுவினர்களால் அவரை அழைத்து வரமுடியவில்லை. அவரை அழைத்து வர நானும் சில வழிகள் சொன்னேன். மஜித் மஜிதியை அழைத்து வந்த பெருமை இதை மன்னனிற்கு சேரும் என்பதாலும், அவரை போன்ற இயக்குனர்கள் வரும் பொழுது இன்னும் ஒரு உத்வேகம் பிறக்கும் என்பதற்காகவும் ஆனால் அது சாத்தியமடையவில்லை.

இருப்பினும் இவர்கள் ” அக்கா குருவி ” படத்தை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதை பார்த்த அவர், படம் உங்களின் மண்ணிற்கேற்றவாறு படத்தின் தன்மையும், உணர்வும் குறையாமல் மிக சிறப்பாக உருவாக்கியுள்ளீர்கள். அதிலும் இசை மிகவும் அற்புதம் என்று அவர் தரப்பில் இருந்து படத்தை பாராட்டி மின்னஞ்சலை இந்த குழுவினருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஒரு இசைக்கலைஞன் தமிழக மக்களை மட்டுமல்ல உலகிலுள்ள தமிழ் பேசும் மக்களை மட்டுமல்ல, பெர்சியன் மொழி பேசும் ஒரு இயக்குனரையும் கூட கட்டிப்போட்ட இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது என்பது ஒன்று அல்ல ஐந்து தருவதற்கு கூட தகுதி இருக்கிறது. நாம் தெளிவாக சொல்ல வேண்டியது, ஆளுநர் பதவியோ, ஜனாதிபதி பதவியோ, பாரத ரத்னா விருதை விட பெரியது இல்லை என்பது தான் என்றார்.