குழப்பத்தின் உச்சம்! – ‘அங்காரகன்’ விமர்சனம்!

பல நூறு வருடங்களுக்கு முன்னர், அடர் வனப்பகுதியில் பிரிட்டிஷாரால் ஒரு ரிசார்ட் உருவாக்கப்படுகிறது. இந்த ரிசார்ட்டுக்கு புதிதாக வரும் மேனேஜர் ‘அங்காடி தெரு’ மகேஷ், அந்த ரிசார்ட்டினை புதிப்பிக்கிறார். ரிசார்ட்டின் அருகிலேயே, நீண்ட நாட்களாக பூட்டியிருக்கும் ஒரு சிறிய பங்களாவையும் புதிப்பிக்கிறார்.

இந்த ரிசார்ட்டில், வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்த சிலர் தங்குகின்றனர். அதில் இரண்டு பெண்கள் மாயமாகின்றனர். அதைத் தொடர்ந்து நாயகன் ஶ்ரீபதிக்கும் அங்கே தங்கியிருக்கும் இன்னொருவருக்கும் சண்டை வருகிறது. அப்போது அங்கு வரும் போலீஸ் அதிகாரி சத்யராஜ், விசாரணையில் இறங்குகிறார். மாயமான பெண்கள் நிலை என்னவானது? இவர்களது சண்டைக்கு என்ன காரணம்? என்பது தான், அங்காரகன்.

கருந்தேள் ராஜேஷ் எழுதிய கதைக்கு, நாயகன் ஸ்ரீபதி திரைக்கதை அமைத்து, கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்ற, மோகன் டச்சு ஒளிப்பதிவு செய்து, இயக்கியிருக்கிறார். இவர்கள் எதை பற்றி சொல்வது? எப்படி சொல்வது? என தெரியாமல், இவர்களும் குழம்பி, படம் பார்ப்பவர்களையும் குழப்பியிருக்கிறார்கள்.

இந்த குழப்பமான படத்தினை காக்கும் ஒரே அஸ்திரமான சத்யராஜையும், வீணடித்திருக்கிறார்கள்.

நாயகன் ஶ்ரீபதி முழுநேர குடிகாரராக இருக்கிறார். அதனால் கதைக்கோ, திரைக்கதைக்கோ எந்த பிரயோஜனமும் இல்லை.

நாயகி நியாவுக்கு ஒரு பாடல், சில காட்சிகள் அவ்வளவு தான்.

இவர்களோடு, படத்தில் நடித்திருக்கும் அங்காடித்தெரு மகேஷ், அப்புக்குட்டி, கே.சி.பிரபாத், ரெய்னா காரத் ஆகியோர் இயக்குநரின் விருப்பப்படி வந்து போகின்றனர்.

மோகன் டச்சுவின் ஒளிப்பதிவும், கு.கார்த்தியின் இசையும், படத்திற்கு எந்த வகையிலும் உதவவில்லை.

அங்காரகன் – குழப்பத்தின் உச்சம்!