‘அங்கம்மாள்’ –  விமர்சனம்!

அங்கம்மாள் திரைப்படத்தை, ‘நஜாய் பிலிம்ஸ்’ & ‘ஃபிரோ மூவி ஸ்டேஷன்’ இணைந்து தயாரித்துள்ளது. பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வழங்கியிருக்கிறது. இதில் கீதா கைலாசம், சரண் சக்தி, ‘நாடோடிகள்’ பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன், வினோத் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதையைத் தழுவி, திரைக்கதை,  எழுதி இயக்கியிருக்கிறார், விபின் ராதாகிருஷ்ணன். ஒளிப்பதிவு, அஞ்சாய் சாமுவேல். இசை மற்றும் பின்னணி இசை, முகமது மக்பூல் மன்சூர்.

சுமார் 50 – 60 குடும்பங்களை உள்ளடக்கிய ஒரு குக்கிராமம். இந்த கிராமத்தில் கணவனை இழந்த அங்கம்மாள்( கீதா கைலாசம்), பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் சுடலை ( பரணி) , விவாசாயம் செய்து வருகிறார். இவருக்கு சாரதா ( தென்றல் ரகுநாதன்) என்ற மனைவியும், மகளும் உண்டு. இளைய மகன் பவளம் ( சரண் சக்தி), டாக்டர். இவர், தன்னுடன் படித்த ஜாஸ்மினை ( முல்லை அரசி) காதலித்து வருவதுடன், அவரையே கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறார். இவரது தாயாரான அங்கம்மாள், ரவிக்கை அணியும் பழக்கமில்லாதவர். இதன் காரணமாக, அங்கம்மாளின் மகன் பவளம், தனது காதலி வீட்டார் தங்களது குடும்பத்தை பற்றி தரக்குறைவாக எண்ணிவிடுவார்களோ என அச்சப்படுகிறார். இதனால், எப்படியாவது தனது கல்யாணத்தில் ரவிக்கை அணிய வைத்துவிட முயற்சிக்கிறார். அங்கம்மாள் ரவிக்கை அணிந்தாரா? பவளத்தின் கல்யாணம் நடந்ததா? என்பது தான், அங்கம்மாள் திரைப்படத்தின் கதை.

அங்கம்மாள் கதாபாத்திரத்தில், கீதா கைலாசம் வெகுவாக பொருந்தியிருக்கிறார். எதற்கும் துணிந்த, தைரியமான பெண்மணியாக நேட்டிவிட்டி பாஷையுடன், டிவிஎஸ் மொபெட்டில் வலம் வரும் கம்பீரமே அழகுதான். சுருட்டுப்புகையுடன், கெட்ட வார்த்தைகளையும் சரளமாக ஊதித்தள்ளுகிறார். புதிதாக மணமான தம்பதிகளை நக்கல் செய்வதிலிருந்து மருமகளை படுத்திவைப்பது வரை அனைத்து காட்சிகளிலும் அங்கம்மாள் பளிச்சென தெரிகிறார். இந்தப்படம் அவருக்கு தனித்த பேரையும், புகழையும் கொடுக்கும்.

‘நாடோடிகள்’ பரணி, ‘வடசென்னை’ சரண். இருவருமே தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பரணியின் மனைவியாக நடித்த தென்றல் ரகுநாதன், கீதா கைலாசத்துடன் போட்டிப்போட்டு நடித்திருக்கிறார். சரணின் காதலியாக வரும் முல்லையரசி நடிப்பிலும், அழகிலும் ரசிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அஞ்சாய் சாமுவேலுவின் ஒளிப்பதிவில், கிராமத்து பின்புலம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முகமது மக்பூல் மன்சூரின் இசை படத்தின் பெரும் பலமாக இருக்கிறது. படம் முழுவதும் எதார்த்தம் நிறைந்த காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. சில காட்சிகள் மெதுவாக நகர்கின்றன.

இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன், கோடித்துணி சிறுகதையை சமார்த்தியமாக திரைக்கதையாக்கியிருக்கிறார். ஆஹா ஓஹோ என்று சொல்ல முடியாவிட்டாலும், ரசனைக்குரிய படமாகத்தான் இருக்கிறது. இந்த அங்கம்மாள்.