எஸ் .ராமகிருஷ்ணன் கதையைத் திருடிவிட்டார்! ‘ஆந்தை ‘ படத்தின் கதாசிரியர்!

ஜீ6 மூவீஸ்ஸ் (Zee6 Movies) நிறுவனம் சார்பில் நவீன் மணிகண்டன் ஒளிப்பதிவு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஆந்தை’. இதன் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி தயாரித்துள்ளார் சிங்கப்பூரைச் சேர்ந்த மில்லத் அகமது.

இது ஒரு சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கிறது.  இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீடு நேற்று நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் விஷ்வா கலந்து கொண்டார். விழாவில் படக்குழுவைச் சேர்ந்த படத்தின் கதாசிரியர், தயாரிப்பாளர் மில்லத் அஹமது, படத்தை இயக்கியிருக்கும் நவீன் மணிகண்டன், இசையமைப்பாளர் எஸ்.ஆர். ராம், படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள விகாஸ், நாயகியாக நடித்துள்ள யாழினி முருகன், நடிகர் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், பிரபல பாடகர் நாகூர் அனிபாவின் மகன் நெளஷாத் அனிபா,

ஒலிப்பதிவாளர் சங்கத்தைச் சேர்ந்த மோகனரங்கன், ஆக்சன் ரியாக்சன் விநியோக நிறுவனத்தின் ஜெனிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் எழுத்தாளர் மில்லத் அகமது பேசும்போது,

“நான் கதையாக எழுதியும் குறும்படமாக உருவாக்கியும் பல விருதுகள் பெற்றதுமான என் கதையை எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணன் திருடி,’அயோத்தி ‘படத்தின் கதையாக்கி அது படமாக வந்தது. படமும் பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி பெற்றது. அந்தக் கதை எனது ‘சிங்கப்பூர் கதம்பம் ‘சிறுகதை தொகுப்பில் உள்ளது. இது சம்பந்தமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

இது பற்றி நான் நியாயம் கேட்டபோது. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனோ படத்தில் நடித்த சசிகுமாரோ இதற்குப் பதில் சொல்லவே இல்லை. என் பேச்சைக் கேட்பதற்கும் என்னுடன் பேசி விவாதிப்பதற்கும் யாரும் தயாராக இல்லை. இது சம்பந்தமாக நான் போராடிப் பார்த்து ஒரு கட்டத்தில்  மனம் வெறுத்துப் போய் சோர்வடைந்து விட்டு விட்டேன்.சினிமாவில் எளியவர்களின் குரல்கள் எடுபடுவதில்லை. இப்படிக் கதை திருட்டுகளை  பெரிய எழுத்தாளர்களே செய்கிறார்கள். இது வருத்தமாக உள்ளது.இந்த ‘ஆந்தை’ படத்தின் கதை ஒரே இரவில் நடக்கிறது.அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது” என்றார்.

ஒரு சைக்கோ த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்தப் படம் ஒரே வாரத்தில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது .  வணிக சினிமாவுக்கான விறுவிறுப்பு ,பரபரப்பு, காதல், சஸ்பென்ஸ் , திகில் ,நகைச்சுவை, கவர்ச்சி, பாடல்கள் என்று அனைத்தும் சேர்ந்த கலவையாக ‘ஆந்தை’ படம் உருவாகியுள்ளது.