அரியவன் – விமர்சனம்!

திருச்சிற்றம்பலம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம்,  அரியவன்.  அறிமுக நடிகர்‌‌ ஈஷான் நாயகனாக நடித்திருக்க, ப்ரணாலி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் டேனியல் பாலாஜி, ரமா, சுப்ரமணி, சத்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை பற்றிய, சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல படமாக வந்துள்ளது.

கபடி விளையாட்டு வீரரான நாயகன் ஈஷானும்,  நாயகி ப்ரணாலியும் காதலித்து வருகின்றனர்.  இதில் நாயகி, ஆதரவற்றோர் இல்லத்தில் தனது தோழியுடன் வசித்து வருகிறார்.  இந்நிலையில் டேனியல் பாலாஜி தலைமையிலான  ஒரு கும்பல், காதல் என்ற போர்வையில் இளம் பெண்களை ஏமாற்றி , அவர்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர். அந்த கும்பலிடம் சிக்கிய  நாயகியின் தோழியின் மூலம்  மற்ற பெண்களை நாயகனும், நாயகியும் காப்பாற்றுவதே, அரியவன் படத்தின் கதை.

எனர்ஜிடிக் புதுமுக நாயகன்  ஈஷான் படத்திற்காக கடின உழைப்பை கொடுத்து இருக்கிறார். ஆக்ஷன், சென்டிமென்ட், காதல்  என அனைத்து  காட்சிகளிலும் தனது நடிப்பினை கொடுத்துள்ளார். கவனிக்கவும் வைக்கிறார். அவரது நிறமும், உயரமும் மண்சார்ந்த நாயகனாக உருவெடுக்க வாய்ப்புக்க்கள் அதிகம். விஷாலை போல் இன்னொரு அடிதடி நாயகன்!

நடிப்பின் மூலம் சின்ன சின்ன முகபாவனைகளை வெளிப்படுத்தி  ரசிகர்களை எளிதில் தன் பக்கம் ஈர்த்துக்கொள்கிறார், நாயகி ப்ரணாலி.

வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்,  டேனியல் பாலாஜி.

ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர், கிரிநந்த் ஆகிய மூவரின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையும் பரவாயில்லை!

விஷ்ணுவின் ஒளிப்பதிவு படத்தின் பலம்! சண்டைக்காட்சிகளில் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமான கதை தான் என்றபோதிலும், இயக்குநர் மித்ரன் ஜவஹர் தனது வித்தியாசமான திரைக்கதையின் மூலம் விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியுள்ளார்.

பெண்கள் தங்களை காத்துக்கொள்ள  எந்த விதமான தயக்கமும் இல்லாமல் அவர்களே முன் வரவேண்டும்.  வீடியோவை எடுத்து மிரட்டுகிறார்கள் என்பதற்காக அப்பாவி பெண்கள் தங்கள் வாழ்க்கையை அழித்து கொள்ளக்கூடாது. துணிந்து போராட வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தும் இந்தப்படம், பாராட்டத்தக்கது.

கிளைமாக்ஸில் நாயகன் ஈஷான் சொல்லும் அறிவுரை ஏற்று, எழுந்து நின்று கைதட்டலாம்!