‘பிளாஸ்ட்’ படத்தில் கராத்தே மாஸ்டராக நடித்திருக்கிறேன்! – அர்ஜுன்!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாயுள்ள பிளாஸ்ட் திரைப்படம், மே மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘பிளாஸ்ட்’ படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம்,  கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஐஸ்வர்யா கல்பாத்தி அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராகவும் பங்காற்றியுள்ளனர்.

பிளாஸ்ட் படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் பேசுகையில்,

”இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து திரையுலகில் பணியாற்ற அனுமதித்த பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர்தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய ‘லவ் டுடே’ படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு.. கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஐஸ்வர்யா கல்பாத்தி- அர்ச்சனா கல்பாத்தி- அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அகோரம் சாரிடம் கதையை சொன்னேன். கதையை சொல்லி முடித்ததும், இந்த படத்தை நிச்சயமாக தயாரிக்கிறோம் என்றார். அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாது. இதற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.

இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழு சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். இதற்காக மீண்டும் ஒருமுறை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் அடைகிறேன். அவருக்கு நன்றி. அபிராமி- ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரங்களும் இந்த படத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். ஒளிப்பதிவாளர் – இசையமைப்பாளர்- பட தொகுப்பாளர் -சண்டை பயிற்சி இயக்குநர் – என ஒவ்வொருவரும் தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை புதுமுக இயக்குநரான எனக்கு வழங்கியதற்கு நன்றி.

‘பிளாஸ்ட்’ ஆக்ஷன் படம் தான். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தை பார்க்கும் போது எல்லா அப்பாக்களும் படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுடன் படத்தை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். நம் குடும்பம் என்பதை உணர்வீர்கள். சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம். ஆனால் அதனை பிரச்சாரமாக சொல்லாமல் கதையுடன் சுவாரசியமாக சொல்லி இருக்கிறோம். அனைவரும் மே 28ம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் அர்ஜுன் பேசுகையில்,

‘பிளாஸ்ட்’ திரைப்படம் ரியலி ஒரு பிளாஸ்ட் தான். நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை நான் இப்போதுதான் முதன்முறையாக ஏற்று நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் சுபாஷிற்கு முதல் நன்றி.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை நான் பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம். நான் ஏராளமான புது முக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர். தனக்கு தேவையானதை நேர்த்தியாக கலைஞர்களிடமிருந்து வாங்கி விடுகிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய இளம் திறமைசாலிகளிடமிருந்து நான் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் குறிப்பிட்டது போல்  ஏஜிஎஸ் நிறுவனம்  ஒவ்வொரு திறமைசாலிகளையும் ஜும் செய்து பார்த்து தேர்வு செய்கிறார்கள். ஆனால் என் மீது அவர்கள் இதுவரை ஜும் செய்யவில்லை. இப்போதுதான் இந்த நிறுவனத்துடன் நான் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறேன். அவர்களுடைய தொழில் நேர்த்தி, அணுகுமுறை, எல்லாம் சிறப்பான அர்ப்பணிப்புடன் இருக்கிறது. ஐஸ்வர்யா கல்பாத்தி இரவு இரண்டு மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தார். அதை பார்த்ததும் எனக்கு வியப்பாகவும் , இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது.

நடிகை அபிராமி உடன் நான் முதன் முதலாக நடிக்கும் போது அவர் மலையாளத்தை மட்டும்தான் பேசுவார். உடைந்த தமிழில் தான் அப்போது பேசுவார். ஆனால் இப்போது தமிழில் பேசி அசத்துகிறார். அதே சமயத்தில் நடிகையாக பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவர் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமாக உழைத்து அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதே போல் நடிகை ப்ரீத்தி முகுந்தனை பார்த்து வியக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போது பார்த்தாலும் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவர் அடிப்படையில் நல்லதொரு நடன கலைஞர். ஆக்ஷன் காட்சிகளில் அவருடைய கால் அனாசயமான உயரத்திற்கு சென்றதை பார்த்தேன், வியந்தேன். தொடர்ந்து அவர் இது போன்ற ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவாளர் அருண், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு, கலை இயக்குநர் வீரமணி என ஒவ்வொரு கலைஞர்களும் டீம் ஒர்க் ஆக பணியாற்றினர்,” என்றார்.