தமிழ் திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மிரள வைக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களின் வரலாற்றை மாற்றி, அனைவரையும் இருக்கை நுனியில் கட்டிப்போட்டு பயமுறுத்திய திரைப்படம் “டிமான்ட்டி காலனி”. 2015 ல் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம், 8 வருடங்களுக்குப் பிறகு ‘டிமான்ட்டி காலனி 2’ என்ற பெயரில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி உள்ளது.
முந்தின பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. டிமான்ட்டி காலனி படத்தின் சம்பவங்களுக்கு முன்பு நடந்த கதையும், அப்படத்தின் முடிவுக்கு பிறகு நடக்கும் சம்பவங்களும் சேர்த்து, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முந்தின பாகத்தை விட பிரமாண்டமாகவும், பல சர்ப்ரைஸ் திருப்பங்களுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.
மிகப்பிரமாண்ட பொருட்செலவில், மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில், சிறப்பான VFX காட்சிகளுடன் இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. குமரேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற்கொண்டிருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஒயிட் லைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் விஜய் சுப்பிரமணியன், RC ராஜ்குமார் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
முழுப்படமும் முடியும் முன்னதாக படத்தின் முழு உரிமையையும் BTG Universal நிறுவனம் சார்பில் பெற்று, திரு. பாபி பாலச்சந்திரன் இப்படத்தின் தயாரிப்பாளராக மாறியுள்ளார். மேலும் படத்தின் முழு வெளியீட்டையும் BTG Universal நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
டாப்-லீக் மென்பொருள் ஜாம்பவான் திரு. பாபி பாலச்சந்திரன், எக்ஸ்டெரோவின் நிறுவனத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாவார். இது சைபர் தடயவியல், சட்ட ஆளுமை ஆபத்து மற்றும் இணக்கம் (GRC) மற்றும் டேட்டா பிரைவசி ஸ்பேஸ் ஆகியவற்றில் முன்னணி பன்னாட்டு SaaS யூனிகார்ன் நிறுவனமாகும். மென்பொருள் துறையில் ஜாம்பவானாக கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன் BTG Universal நிறுவனம் மூலம் திரைத்துறையில் கால் பதிக்கிறார். திரைத்துறையின் பல பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிந்த மனோஜ் Dr. M. மனோஜ் பெனோ இந்நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பேற்றுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படைப்பாக “டிமான்டி காலனி 2’ வெளியாகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஓசூர், சென்னை மற்றும் ஆந்திரா மாநில எல்லை ஆகிய இடங்களில் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் டீசர், இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.