Dawn Pictures தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து மற்றும் இயக்கத்தில், நடிகர் அதர்வா முரளி நடித்துள்ள “இதயம் முரளி” திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
திரையரங்குகளில் பார்வையாளர்கள் அளித்து வரும் இந்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்துத் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
அந்த விழாவில் பேசிய நடிகர் அதர்வா முரளி,
இந்த படக்குழுவுடன் பயணித்தது பள்ளிப் பருவ நண்பர்களின் ரீயூனியன் போல மிகவும் அழகான அனுபவமாக இருந்தது என்றார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு ஒரு சொந்த வீடு போன்ற குடும்பச் சூழல் அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், ‘இதயம்’ என்ற தலைப்பு முதலில் ஆழமான காதல் கதைக்கு மட்டுமே செட்டாகும் எனத் தயங்கியதாகக் கூறினார். ஆனால், இலகுவான காதல் கதையான இத்திரைப்படத்தின் மூலம் தனது தந்தை (மறைந்த நடிகர் முரளி) அவர்களுக்கு ஒரு ஆத்மார்த்தமான மரியாதையை இயக்குநர் ஆகாஷ் மிக அழகாகச் செய்ய உதவியுள்ளார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், எல்லோரையும் அழகாகக் காட்டிய ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, டப்பிங் செய்த 4 மணி நேரக் காட்சிகளை 2 மணி நேரம் 45 நிமிடங்களாகக் கச்சிதமாகத் தொகுத்த எடிட்டர் பிரதீப், மற்றும் வசனங்களால் மெருகேற்றிய ரமணகிரிவாசன் ஆகியோருக்கு நன்றி கூறினார். இசையமைப்பாளர் தமன் பிஸியாக இருந்தாலும், இப்படத்தில் நடித்தும், இசையமைத்தும் எப்போதும் ஜாலியாக இருந்தார் என்றும், ஆரம்பம் முதலே ‘ப்ளாக்பஸ்டர்’ என்று அவர் கொடுத்த நம்பிக்கை தான் இன்று நனவாகியுள்ளது என்றும் அதர்வா தெரிவித்தார்.

அதர்வாவிற்கு பிறகு பேசிய இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்,
படம் பார்த்த ரசிகர்கள் பலர் இது தங்கள் பள்ளி, கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியதாகக் கூறியதுதான் இப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றார். ஒரு நடிகராக மட்டுமில்லாமல், தனது கனவிற்காக எண்ணற்ற தூக்கமில்லா இரவுகளைக் கடந்து, எல்லா ஏற்றத்தாழ்வுகளிலும் அதர்வா தனக்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றி தெரிவித்தார். கயாது லோகர், நிஹாரிகா, ப்ரீத்தி முகுந்தன், மோனிஷா, ஏஞ்சலின் போன்ற பல புதிய திறமைகளை இப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி, அவர்கள் இன்று முன்னணி நடிகைகளாக வளர்ந்திருப்பது பெருமையாக உள்ளது எனக் குறிப்பிட்டார். அத்துடன், தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக், உடை வடிவமைப்பாளர் பல்லவி, போஸ்டர் கபிலன், ஒலிக்கலவை சுரேன் மற்றும் உதவி இயக்குநராகவும் வசனத்திலும் உதவிய நடிகர் டிராவிட் உட்பட உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைப் பகிர்ந்து கொண்டார்.