‘ஆகஸ்ட் 16, 1947’ – விமர்சனம்!

கௌதம் கார்த்திக், ரேவதி ஷர்மா, விஜய் டிவி புகழ், மதுசூதன் ராவ், ரிச்சர்ட் ஆஷ்டன், ஜேசன் ஷா, டி.எஸ்.ஆர். தர்மராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், ஆகஸ்ட் 16,1947. ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருக்கும் இப்படத்தினை, அவரது உதவியாளர் என்.எஸ்.பொன்குமார் இயக்கியிருக்கிறார்.

செங்காடு எனும் கிராமம், ஆங்கிலேயரான ராபர்ட் (ரிச்சர்ட் ஆஷ்டன்) கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த கிராமம் உலகத்தரம் வாய்ந்த பருத்தி உற்பத்தியில் சிறந்தது. இந்த பருத்தியை அவரது நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக, இங்குள்ள மக்களை மிகக்கொடூரமான முறையில் வேலை வாங்கி வருகிறார். ராபர்ட்டின் மகன் ஜஸ்டின் (ஜேசன் ஷா) அவனை விட கொடூரமானவன். சிறுமிகளையும், பெண்களையும் பாலியல் வல்லுறவு செய்வது அவனது முழு நேர வேலை.

அந்த ஊர் மக்கள். ராபர்ட்டின் மகன் ஜஸ்டினுக்கு பயந்து சிறுமிகளை, சிறுவர்களாக வேடமிட்டு அவனிடமிருந்து பாதுகாத்து வருகிறார்கள். செங்காடு கிராமத்தின் ஜமீந்தார் (மதுசூதன் ராவ்) தனது மகள் (ரேவதி ஷர்மாவை) வீட்டிற்குள்ளேயே மறைத்து, வளர்த்து வருகிறார்.

ஒரு நாள் ஜமீந்தாரின் மகள், ஜஸ்டினின் கண்களில் பட்டுவிடுகிறார். அவளை பலவந்தம் செய்யும்போது, அவளது காதலன் பரமன் (கௌதம் கார்த்திக்), குறுக்கிடுகிறார்.

இந்நிலையில் இந்தியா சுதந்திரம் அடையப்போகும் செய்தியை, செங்காடு மக்களிடம் ராபர்ட் மறைக்கிறார். என்ன காரணம்?

மொத்த கிராமமே அஞ்சி நடுங்கும் இவர்களிடமிருந்து காதலி ரேவதி ஷர்மாவை, கௌதம் கார்த்திக் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே, ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் கதை!

ரிச்சர்ட் ஆஷ்டன், ஜேசன் ஷா, ரேவதி ஷர்மா இவர்கள் மூவரும் கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து, நன்றாக நடித்திருக்கிறார்கள். ரேவதி ஷர்மா அழகிலும் நடிப்பிலும் தனி கவனம் பெற்றுவிடுகிறார்.

கௌதம் கார்த்திக் சிறப்பாக நடித்திருந்தாலும், அவரது குரல் கதைக்களத்தினை விட்டு அந்நியப்பட்டு நிற்கிறது.

ஹைபர் ஆக்டிவ் நடிகர் விஜய் டிவி புகழ், நன்றாகவே நடித்திருக்கிறார். விடுதலை கிடைத்ததை சொல்லமுடியாமல் தவிக்கும் காட்சியில், பரிதாபம் ஏற்படுகிறது.

அழுத்தமான காட்சிகளுடன் ஆரம்பிக்கும் படம், அடுத்தடுத்த காட்சிகளில் சோர்வையும், வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. பல காட்சிகள் எந்தவிதமான உணர்வையும் ஏற்படுத்தவில்லை!

செல்வகுமார் எஸ்.கே-வின் ஒளிப்பதிவு, சான் ரோல்டனின் இசை, ஓகே!

விடுதலை கிடைக்கப்போவது தெரிந்து, வெகுண்டு எழ, செங்காடு கிராமத்தில் யாருமே துணியாதபோது, அதை மறைத்தால் என்ன? மறைக்காவிட்டால் என்ன?

அறிமுக இயக்குனர் என்.எஸ்.பொன்குமாரின் மொத்த கிரியேட்டிவிட்டியும், காமெடி நடிகர்  டி.எஸ்.ஆர் தர்மராஜ் காதில் தொங்கும், ‘பூட்டு’ போன்ற காதணியிலேயே அடங்கிவிடுகிறது!

‘ஆகஸ்ட் 16, 1947’ – ஏற்றுக்கொள்ள முடியாத அதீத கற்பனையும், சொதப்பலான திரைக்கதையும்.