அண்டவெளியில் இருந்து சிதறும் ஒரு கல் பூமியில் விழுகிறது. ஆராய்ச்சியில் அந்தக்கல் மிகவும் சக்தி வாய்ந்தது என உறுதி செய்யப்படுகிறது. (அந்தக்கல்லின் மூலம் உருவாகும் சக்தியை வைத்து பூமியை மொத்தமாக அழித்து விடலாம்! ) இதை பயன்படுத்தி, நாசகார வேலைகளுக்கு பயன்படுத்த வில்லன் கோஷ்டி முயற்சிக்கிறது. அதே சமயத்தில் அந்தக்கல்லினை கைப்பற்ற ஏலியன் பூமிக்கு வருகிறது. இதன் பின்னர் என்ன நடக்கிறது? என்பது தான், அயலான் படத்தின் கதை.
வழக்கமான சிவகார்த்திகேயன் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். காதல் கொள்ள, கட்டிப்பிடித்து பாட்டுப்பாட ரகுல் பிரீத் சிங். யோகி பாபு, கருணாகரன் ஆகியோருடன் காமெடி என தனது முந்தைய படங்களை போலவே இந்தப்படத்திலும் ஸ்கோர் செய்கிறார். அதைத் தவிர ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார்.
வழக்கமான கமர்ஷியல் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங். திரைக்கதையின் போக்கில் ஒரு சில காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் பயன் படுத்தப்பட்டிருக்கிறார். காமெடிக் கூட்டணியினர் யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர், சிவ கார்த்திகேயனுடன் சேர்ந்து படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார்கள்.
வில்லன் கோஷ்டியில் சரத் கேல்கர் மற்றும் அவரது உதவியாளராக நடித்திருக்கும் இஷா கோபிகர் இருவருமே கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்திருக்கின்றனர்.
இவர்களில் அதிகம் பாராட்டப்பட வேண்டிய இருவர், ஏலியனாக நடித்திருக்கும் ‘மதிமாறன்’ படத்தில் நடித்த வெங்கட் செங்குட்டுவனும், அவருக்கு குரல் கொடுத்த சித்தார்த்தும் தான். பெர்ஃபெக்ட் மேட்ச்.
நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருப்பதோடு, பின்னணி இசை படத்தின் தரத்தை உலக தரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியில் அயலான் உயர்ந்து நிற்கிறது.
அயலான், சயின்ஸ் ஃபேன்டஸி படத்தினை அனைவருக்கும் புரியும் வண்ணம் இயக்குநர் ஆர்.ரவிகுமார், எளிமையான முறையில் சொல்லியிருக்கிறார். மேலும், இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பூமி சொந்தம் என்ற கருத்தினை வலியுறுத்தியிருப்பது பாராட்டத்தக்கது.
மொத்தத்தில், ‘அயலான்’ அனைவருக்குமான பொழுதுபோக்கு படம்!