‘பேபி அண்ட் பேபி’ –  விமர்சனம்!

Baby and Baby Movie Review

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில், பி யுவராஜ் தயாரித்து, ஜெய், சத்யராஜ், யோகி பாபு, பிரக்யா நாக்ரா, சாய் தன்யா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், இளவரசு, சிங்கம் புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, பாப்ரி கோஷ், ராமர், தங்கதுரை, சேஷு உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் படம், ‘பேபி அண்ட் பேபி’. எழுதி இயக்கியிருக்கிறார், பிரதாப்.

முன் பின் அறிமுகமில்லாத ஜெய், யோகி பாபு குடும்பத்தினர், அவரவர் கைக்குழந்தையுடன் ஒரே விமானத்தில், வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வருகின்றனர். இந்தியாவை அடைந்த பின்னர், மதுரை செல்லும் விமானத்தில் யோகி பாபுவும், கோயமுத்தூர் செல்லும் விமானத்தில் ஜெய்யும் செல்கின்றனர். விமானத்தில் ஏறிய பின்னரே குழந்தைகள் மாறியிருப்பது தெரிய வருகிறது. இதனால், இரண்டு குடும்பத்தினர்களுக்கிடையே கூச்சலும் குழப்பமும் உருவாகிறது. ஜாதகம், சாதிப்பெருமையில் ஊறிப்போயிருக்கும் குழந்தைகளின் தாத்தாக்களான சத்யராஜ் மற்றும் இளவரசுவிடம் சிக்கித்தவிக்கும் ஜெய், யோகி பாபு குடும்பத்தினரின் காமெடி கலாட்ட தான், ‘பேபி அண்ட் பேபி’.

‘பேபி அண்ட் பேபி’ படம் ஆரம்பம் முதல் இறுதிவரை, லாஜிக் பற்றி எதுவுமே கவலைப்படாமல், ஆண், பெண் குழந்தைகள் வேற்றுமையை வேரறுக்கும், ஒரு நல்ல மெசேஜுடன் சிரிக்க வைப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு உருவாக்கியிருக்கிறார், இயக்குநர் பிரதாப். இப்படம், அடிதடி, ஆபாசமற்ற, குடும்பத்தினர் குழந்தைகளுடன் சென்று படம் பார்க்கும்படியாக அமைந்திருக்கிறது.

ஹீரோ ஜெய் , யோகி பாபு இருவருமே தங்களது கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்திருக்கின்றனர்.

பிரக்யா நாக்ரா, சாய் தன்யா இருவரும் குழந்தைகளின் தாயாக நடித்து, பெண் ரசிகைகளை எளிதாக கவர்ந்து விடுகின்றனர். குழந்தைகள் அழும்போது அரவணைத்து தாப்பால் ஊட்டும் காட்சி புதிது இல்லை என்றாலும், பெண்களிடம் எளிதாக இந்தக்காட்சி சென்றடைவதோடு கை தட்டல்களையும் பெறும்.

சத்யராஜ், ஆனந்தராஜ், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, பாப்ரி கோஷ், ராமர், தங்கதுரை, சேஷு உள்ளிட்ட நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்து சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறார்கள்.

டி இமானின் இசையில் ‘ஆரா அமுதே’ பாடல் திரும்ப கேட்கும் வகையில் இருக்கிறது. கதைக்களத்திற்கேற்ற பின்னணி இசை.

டிபி சாரதியின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருக்கிறது.

மொத்தத்தில், ‘பேபி அண்ட் பேபி’  சிரிக்கவும், சிந்திக்கவும்!