விமல், சூரி, ஸ்ரீதா, கே ஜி எஃப் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி வைத்யநாதன் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், படவா. கே வி நந்தா எழுதி இயக்கியிருக்கிறார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்திருக்க, ஜான் பீட்டர் இசையமைத்து இருக்கிறார்.
விமல் மற்றும் சூரி இருவரும் இணை பிரியாத நண்பர்கள். விவசாயம் பொய்த்துப் போன நிலையில், செங்கல் சூளை மட்டுமே இவர்கள் வசிக்கும் கிராமத்தினருக்கு வாழ்வாதாரம். இப்படியான சூழலில், ஊதாரித்தனமாக சுற்றி வரும் விமல், சூரி இருவரும், கையில் கிடைக்கும் பொருட்களை திருடி, குடித்து கும்மாளமிட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் இவர்களது தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் கிராம மக்கள் ஒன்று கூடி விமலை நாடு கடத்த முடிவு செய்கின்றனர். அதன்படி, மக்கள் தங்களது உடைமைகளை விற்று, விமலை மலேஷியாவிற்கு அனுப்பி வைக்கின்றனர். சில வருடங்கள் கழிந்த நிலையில், மலேஷியாவில் இவர் வேலை பார்க்கும் இடத்தில் ஆட்குறைப்பு காரணமாக விமலுக்கு வேலை பறிபோகிறது. விமல் சொந்த ஊர் திரும்புகிறார். அதன் பிறகு என்ன நடந்த்து எனபது தான், படவா படத்தின் கதை.
வெட்டியாக ஊர் சுற்றும் கதாபாத்திரத்தில் நாயகன் விமல். நாயகி மீது காதல் கொள்வதும், வில்லனையும், அடியாட்களை பறக்க விடுவதுமாக நாயகனின் வேலையை சரியாக செய்திருக்கிறார். அவரது தோற்றம் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.
நாயகன் விமலின் நண்பனாக சூரி. விமலுடன் சேர்ந்து குடி, கும்மாளம் என்று பயணிக்கிறார். சிரிக்க வைக்க பாடுபடுகிறார். ஆனால், ஒன்றிரண்டு காட்சிகளைத் தவிர, மற்ற காட்சிகளில் சிரிப்பு வரவில்லை.
நாயகியாக ஷ்ரிதா ராவ். வழக்கமான நாயகியின் வேலையை சரியாக செய்திருக்கிறார். நாயகனுடன் கட்டிப்பிடித்து, ஆடிப் பாடியிருக்கிறார்.
விமலின் அக்காவாக தேவதர்ஷினி, மாமாவாக நமோ நாராயணன், வில்லனாக கே.ஜி.எப் ராம் என படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
ஜான் பீட்டரின் இசையில், பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை ஓகே!
ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் கமர்ஷியல் படத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார்.
எழுதி, இயக்கியிருக்கும் கே.வி.நந்தா, விவசாயத்தின் அவசியத்தை முன்னிறுத்தி, சமூகத்திற்கு தேவையான ஒன்றை அழுத்தமாக, அதே சமயத்தில் கமர்ஷியலாக, ரசிக்கும்படி செய்திருக்கிறார். ஆங்காங்கே தொய்வடையும் திரைக்கதையை சரி செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். கருவேலம் மரத்தினால் விவசாயம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது. என்பதற்கு இன்னும் சற்று விளக்கம் கொடுத்திருக்கலாம்.
மொத்தத்தில், ‘படவா’ பரவாயில்லை!