‘பல்டி’ – (விமர்சனம்!) – கரணம் தப்பினால்…!

சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி. இப்படத்தினை, அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கியிருக்கிறார். இதில் ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், ஷிவ ஹரிஹரன், கே. செல்வராகவன், அல்போன்ஸ் புத்ரன், ப்ரீத்தி அஸ்ரானி, பூர்ணிமா இந்திரஜித், அக்‌ஷய் ராதாகிருஷ்ணன், விஜய் பார்கவ், நந்திதா சந்தீப், நித்தின் தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கபடி விளையாடுவதில் கில்லாடிகளான ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், அக்‌ஷய் ராதாகிருஷ்ணன், ஷிவ ஹரிஹரன் உள்ளிட்ட நால்வரும் நெருங்கிய நண்பர்கள். இதில் சாந்தனு பாக்யராஜ் எடுக்கும் எல்லாவிதமான முடிவுகளுக்கும் அனைவரும் கட்டுப்படுகின்றனர். இவர்களது அணியின் பெயர் ‘பஞ்சமி’. இவர்கள் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கே. செல்வராகவன், அல்போன்ஸ் புத்ரன், பூர்ணிமா இந்திரஜித் ஆகிய மூவரும் சட்ட விரோதமான செயல்களை செய்து வருகின்றனர். இவர்கள் மூவருக்குள்ளும் சில பிரச்சனைகள் இருந்து வருகிறது. இவர்களில் கே.செல்வராகவனுக்கும், அல்போன்ஸ் புத்திரனுக்கும் தனித்தனியாக  கபடி அணி இருக்கிறது.

ஒரு முறை நடக்கும் கபடி போட்டியில், சாந்தனு பாக்யராஜ் அணி,  கே.செல்வராகவன் அணியை வென்று விடுகிறது. இதனால், இரண்டு அணிக்கும் மோதல் ஏற்படுகிறது. அதைத்தொடர்ந்து செல்வராகவனிடம் பஞ்சாயத்து நடக்கிறது. அப்போது கே.செல்வராகவன், தனது அணியில் சேர்ந்து விளையாடினால், பணம் தருவதாக சொல்கிறார். சாந்தனு அதற்கு சம்மதிக்கிறார். எனவே, சாந்தனுவின் முடிவை ஏற்று நண்பர்கள் அடுத்து வரும் ஒரு போட்டியில் ஜெயித்துக் கொடுக்கிறார்கள். இதன் காரணமாக கே. செல்வராகவனிடம் நெருக்கம் ஏற்படுகிறது. கபடி விளையாடிக் கொண்டிருந்தவர்களை, அவர்களுக்கே தெரியாமல் அடியாட்களாக்கி, தனக்கு சாதகமாக வைத்துக் கொள்கிறார்.

கே. செல்வராகவன், அல்போன்ஸ் புத்ரன், பூர்ணிமா இந்திரஜித் இவர்களுக்கிடையே நடக்கும் அதிகாரப்போட்டியில், அவர்கள் நகர்த்தும் காய் நகர்த்தலில் ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், அக்‌ஷய் ராதாகிருஷ்ணன், ஷிவ ஹரிஹரன் ஆகியோரின் உயிர் ஊசலாடுகிறது. இதில், தப்பித்தார்களா, இல்லையா? என்பது தான் ‘பல்டி’.

ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், அக்‌ஷய் ராதாகிருஷ்ணன், ஷிவ ஹரிஹரன் ஆகிய இவர்கள் நால்வருமே, அந்தந்த கதாபாத்திரத் தேர்வினுக்கு சரியாக பொருந்தியிருக்கிறார்கள்.

இவர்களில், ஷேன் நிகம், ஒரு கபடி வீரருக்கான உடல்மொழியை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். குறிப்பாக ரைட் போவதற்கு முன்னர் செய்யும் மேனரிசம் அனைவரையும் கவர்ந்து விடுகிறது. அதே போல் அவர் அடிக்கும் பல்ட்டியும். ஆக்‌ஷனில் அட்டகாசம் காட்டி நடித்திருக்கிறார். காதலி ப்ரீத்தி அஸ்ரானியை காணும் போதும், அவர் சொல்லும் காதலை புரிந்து கொள்ளுமிடத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸில் அவருக்கும் சாந்தனுக்கும் நடக்கும் உரையாடலின் போதும் வெகு சிறப்பாக நடித்திருக்கிறார்.

சாந்தனு, முன், பின் என்ன நடக்கும் என்பதை யோசிக்க முடியாத, குழப்பமான கதாபாத்திரத்தில் நடித்து, தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். பூர்ணிமா இந்திரஜித் நடத்தும் சகுனித்தனத்தால் தனது நண்பர்களை பறிகொடுக்கும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக, ஷிவ ஹரிஹரனை கே.செல்வராகவன் குத்திக்கொலை செய்யும் காட்சியில் பரிதவிக்கும் காட்சியை சொல்லலாம். இந்தக்காட்சியில், ஷிவ ஹரிஹரனும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

அன்பொழுக பேசி அட்டகாசம் செய்யும், கொடூரமான கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன், டெரர்ராக நடித்திருக்கிறார். மலையாளத் திரைப்படத்திற்கு புதிய வில்லனாக வலம் வருவார்.

மற்றொரு வில்லனாக இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். சில காட்சிகள் என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரோட கெட்டப் சூப்பர்.

நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி. ஷேன் நிகமின் காதலியாக நடித்திருக்கிறார். கிடைத்த காட்சிகளில் தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையில், ‘ஜாலக்காரி’ பாடல் பலரின் விருப்பப்பாடலாக இருந்தாலும், படத்தில் இடம்பெறும் போது பெரிதாக ஈர்க்கவில்லை! பின்னணி இசையைப் பொறுத்தவரை வழக்கமான கமர்ஷியல் ஐட்டமாக இருக்கிறது. மொத்தத்தில் இசை, அனிரூத்தின் பிரதி பிம்பமாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜெ.புலிக்கல்லின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. சண்டைக்காட்சிகளையும், ‘கபடி’ ஆட்டக் காட்சிகளையும் பிரமிக்கத்தக்க வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

எடிட்டர்  ஷிவ்குமார் வி.பணிக்கரின் எடிட்டிங்கும் படத்தின் தரத்தினை உயர்த்தியுள்ளது.

எழுதி இயக்கியிருக்கும் உன்னி சிவலிங்கம், வழக்கமான ஒரு கதையை கொடுத்துள்ளார். அதில், எந்தவிதமான புதுமையோ, வித்தியாசமோ இல்லை.

சண்டைக்காட்சிகளில் அதிக கவனம் செலுத்தியிருப்பவர், அதற்கான எமோஷனல் காட்சிகளை உருவாக்கவில்லை.

‘பஞ்சமி’, “பொற்றாமரை’ என்ற பெயர் வைத்ததோடு சரி. அந்த அரசியலையும் சரியாக சொல்லவில்லை!

மொத்தத்தில், ‘பல்டி’ – கரணம் தப்பினால்…!