குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட “ஆகோள்”

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்துவின் புதிய நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். ஆகோள் என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன் வைக்கிறது. இந்த நாவல் நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. 1920 ஆம் ஆண்டு கை ரேகை சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம்  நாவலின் ஒரு முக்கிய பகுதியாக இடம் பெற்றிருக்கிறது. இயக்குநர் பாரதிராஜா நூலை அறிமுகம் செய்யும் சிறப்பு காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆகோள் குறித்து கபிலன்வைரமுத்து கூறுகையில்:

சங்க காலத்தில் சிற்றரசுகளுக்கு இடையே நிகழ்ந்த போர்களில் எதிராளிகளின் ஆடு மாடுகளை களவாடி வரும் செயலுக்கு ஆகோள் என்று பெயர். இது களவுச் செயலாகவும் வீரச் செயலாகவும் பார்க்கப்பட்டது. எதிராளியின் வளங்களில் ஒன்றைக் களவாடும் செயல் என்ற பொருளில் என் நாவலுக்கு ஆகோள் என்று தலைப்பட்டிருக்கிறேன். இந்த கதையில் இடம்பெறும் தொழில்நுட்ப களம் குறித்தும், நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு போராட்டம் குறித்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள ஆய்வு செய்து எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்கு இது பயனுள்ள பயணமாக இருக்கும் என நம்புகிறேன்.

நூலின் பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் கூறுகையில்:

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், சிறுகதை, கவிதை, நாவல் என மொழியின் அனைத்துத் தளங்களிலும் இயங்கிக்கொண்டிருக்கும் கபிலன்வைரமுத்துவின் புதிய வரவு ஆகோள். இந்த நாவலின் எந்த பக்கத்தைப் புரட்டினாலும் அதுவே ஒரு தனிக்கதையாக விரியும். இதுவரை தமிழ் இலக்கிய உலகம் காணாத ஒரு முழுமுதற் தொழில்நுட்ப உலகை கபிலன்வைரமுத்து அறிமுகப்படுத்துகிறார். குற்ற இனச் சட்டம் குறித்த ஒரு புதிய பார்வையை இந்த நாவல் வழி விவாதித்திருக்கிறார்.

ஆகோள் கபிலன்வைரமுத்துவின் நான்காவது நாவல். கபிலனின் முந்தைய நாவலான மெய்நிகரி கவண் என்ற பெயரில் திரைப்படமானது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பிறந்ததும் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்து கபிலன்வைரமுத்து எழுதிய நாவலை 2012-ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாலசந்தர் வெளியிட்டார். மெய்நிகரி என்ற நாவலை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். கபிலன்வைரமுத்துவின் சிறுகதைத் தொகுதியான அம்பறாத்தூணி என்ற நூலை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார். தற்போது இயக்குநர் பாரதிராஜா கபிலன்வைரமுத்துவின் நான்காவது நாவலை வெளியிட்டிருக்கிறார். தமிழ் திரையுலகின் ஆகச் சிறந்த இயக்குநர்களின் கரங்களால் தன் படைப்புகள் வெளி வந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக கபிலன்வைரமுத்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.