பூமி – விமர்சனம். ( விளம்பரம் அல்ல )
ரோமியோ – ஜூலியட், போகன் ஆகிய படங்களை அடுத்து, இயக்குனர் லக்ஷ்மன், ஜெயம் ரவி இருவரும் ‘பூமி’ படத்திற்காக இணைந்துள்ளனர். இத்திரைப்படம், 15 ஆம் தேதி ஹாட் ஸ்டார் OTT யில் வெளியானது.
இந்தப்படத்தினை தியேட்டருக்கு கொண்டுவர தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் முயற்சி செய்து வருகிறார்.
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் முடிவடைந்தவுடன் பயன்பாடற்று கிடந்த அமோனியா, சூப்பர் பாஸ்பேட் போன்ற வெடி மருந்துகளின் மூலம் செயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த உரங்களை பயன்படுத்தி வரும் பல நாடுகள் பாலைவனமாக மாறிவருகிறது.
தற்சார்பு பொருளாதாரத்தையும்,, பாரம்பரிய இயற்கை விவசாயத்தையும் வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘பூமி’ படம் எப்படியிருக்கிறது?
ஜெயம் ரவி, ஒரு புகழ்பெற்ற நாசா விஞ்ஞானி. விடுமுறையில் தான் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு வருகிறார். அப்போது விவசாயிகள் கருகிய பயிர்களுக்கு, அரசிடம் உதவி கேட்டு போராட்டம் நடத்துகின்றனர். அதை தொடர்ந்து நடக்கும் விவசாயி தற்கொலை அவரை அதிர்ச்சி அடையச் செய்கிறது.
அதனால் ஜெயம் ரவி, நாசா வேலையை உதறித்தள்ளிவிட்டு பாரம்பரிய விவசாயத்தை கையிலெடுக்கிறார். அதில் வெற்றி பெறும் அவர் மற்ற விவசாயிகளுக்கும் அதன் நன்மையை புரிய வைக்கிறார். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிபர் ரோனித் ராய்யின் கோபத்திற்கு ஆளாகிறார்.
ரோனித் ராய், ஜெயம்ரவிக்கு சகலவிதத்திலும் தொல்லை கொடுக்கிறார். இதன்மூலம் கடும் இழப்புகளுக்கு ஆளாகும் ஜெயம் ரவி பாரம்பரிய விவசாயத்தில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது தான் பூமி படத்தின் கதை.
அழிந்து வரும் விவசாயம் குறித்து இதுவரை வெளியான பல திரைப்படங்கள் மேலோட்டமாகவே இருந்தது. ஆனால் பூமி முழுக்க, முழுக்க விவசாயம் பற்றியும், கார்ப்பரேட் நிறுவனங்களின் களவானி தனங்களையும் சொல்லியிருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களால் ஒவ்வொரு நாடும் எப்படி மோசமான நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறது, என்பதை குழந்தை தனத்துடனும், துருத்திக்கொண்டு நிற்கும் லாஜிக்குடனும் சொல்லியிருக்கிறார், இயக்குனர் லக்ஷ்மன்.
விஞ்ஞானியாகவும், விவசாயியாகவும் ஜெயம் ரவி நடித்திருக்கிறார், அவ்வளவுதான்.
அரசியல்வாதி ராதாரவியிடமும், கார்ப்பரேட் நிறுவன அதிபர் ரோனித் ராயிடமும் விவசாயிகளுக்காக ஜெயம் ரவி பேசும் இடங்கள் பலே..சபாஷ்…
கதாநாயகியாக நடித்திருக்கும் நிதி அகர்வால் அய்யோ பாவம். அவரைப் பற்றி சொல்ல எதுவுமில்லை.
ராதாரவி, ஜான் விஜய், மாரிமுத்து இவர்கள் மூலம் நாட்டின் இன்றைய நிலையை அப்படியே உணர்த்துகிறார்கள். தம்பி ராமைய்யா, விவசாயிகளின் நிலையை புரிய வைக்கிறார்.
டி.இமான் இசை, டட்லியின் ஒளிப்பதிவு, ரூபனின் படத்தொகுப்பு ஆகியோரின் பங்களிப்பு பராவாயில்லை!
பூமி என்னுடைய ’25’ வது படம் என்பதை ஜெயம் ரவி பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.
நேர்மையான ஒரு படத்தைக் கொடுக்க விரும்பியவர்கள் அதை சிறப்பாக கொடுக்கத் தவறிவிட்டனர்.