பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.
இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில்,
“ஒரு படத்தின் மூலம் சமூகத்திற்கு தவறான கருத்தை நாம் சொல்ல போவது கிடையாது. 75 ஆண்டுகளாக சினிமா வரலாற்றில் பேசப்படாத மக்களை பற்றி பேசப் போகிறோம். நாம் சரியான வேலையை செய்யும் போது நமக்கு எதற்காக பதற்றம் வருகிறது என்று தெரியவில்லை.
‘‘எனது ‘அட்டகத்தி’ படத்தை காமெடியாக பார்த்தவர்கள், ‘மெட்ராஸ்’ படத்தில் இருந்து தான் சில குறியீடுகளைப் பற்றி விமர்சித்தார்கள். மெட்ராஸ் திரைப்படம் வெற்றி பெற்றாலும் கூட, எப்படி ஒருவர் மெட்ராஸ் என்ற பெயரில் படம் எடுக்கலாம் என விமர்சனங்கள் எழுந்தது.
மெட்ராஸ்னு ஒரு படத்தை நான் எடுக்கலான, ரஜினிகாந்த் ‘கபாலி’ படத்திற்கு வாய்ப்பு கொடுத்து இருப்பாரான்னு தெரியல. ஆனால் ஒவ்வொரு முறையும் ரஜினியை வைத்து எப்படி இதுபோன்ற வசனங்களை எடுத்தீர்கள்? என்று விமர்சனங்களும், கேள்விகளும் வந்தது. குறிப்பாக, ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? ரஜினிக்குள் எப்படி சாதியை கொண்டு வரலாம்? என்று விமர்சித்தார்கள். நான் ஒரு சாதி வெறியன் என்றெல்லாம் என்னை பேசினார்கள். அப்போது, இந்த மாதிரியான படங்கள் எடுக்கவே முடியாதா? யாராவது எடுக்க வந்தால் இப்படி ஒரு சிக்கல் வருமா? என பயங்கர விவாதம் நடந்தது.
முன்பெல்லாம் என்னை மட்டும் திட்டுவார்கள். தற்பொழுது அந்த லிஸ்டில் மாரி செல்வராஜும், வெற்றிமாறனும் சேர்ந்துவிட்டார்கள். தற்போது விமர்சனங்களை சமாளிப்பதில் இன்னும் இரண்டு பேர் சேர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. எங்கள் மூன்று பேரையும் தமிழ் சினிமாவைச் சீரழிக்கும் இயக்குனர்கள் என்கிறார்கள். பைசன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இருந்தாலும், மாரியால் எப்படி இதுபோன்ற தொடர் வெற்றிப் படங்களை கொடுக்க முடிகிறது என்று எனக்கு ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது”.
ஒரு வருடத்துக்கு 400 படங்கள் தமிழில் வருகின்றன. நாங்கள் எடுக்கும் படங்கள் தான் சினிமாவைச் சீரழிக்கின்றதா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலை தேடுவதுதான் எங்கள் சினிமா. ‘பைசன்’ படம் வருவதற்கு முன்பாகவே இது சாதி படம் போகாதீங்க. ‘டியூட்’ படத்துக்கு போங்க என்றெல்லாம் வெறுப்புணர்வைப் பரப்பினார்கள். இதை நம்பி ‘டியூட்’ படத்துக்கு போனவர்களை அதன் டைரக்டர் கீர்த்தீஸ்வரன் வச்சு செஞ்சுட்டாருல்ல…”, என்றார். ‘டியூட்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் படத்தின் வசூல் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாரி செல்வராஜ் பேசுகையில்,
“பைசன் படம் நான் தொடர்ந்து வேலை செய்வதற்கான பலத்தை கொடுத்துள்ளது. எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், முரண் வந்தாலும் என்னை திருப்பி விடலாம், என்னுடைய கதை சொல்லலை மாற்றிவிடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். அது எனது ரத்தத்திலேயே கிடையாது. நான் அதை விட்டு விலகுவதற்கான வாய்ப்பும் என்னிடம் இல்லை. நான் சந்திக்கும் பிரச்சனைகள், மனிதர்கள் அவர்கள் சொல்லும் கதைகளை எல்லாம் கேட்டால் நீங்கள் வேறு எந்த படமும் எடுக்க முடியாது.
என்னுடைய ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையில் இந்த சமூகம் எப்படி இருக்கிறது? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதாகவே இருக்கும். நான் நிலையானவனாக இருக்க விரும்புகிறேன். ஏன் இது போன்ற படங்களை எடுக்கிறீர்கள்? என்ற கேள்விகளை பத்திரிகையாளர்கள் என்னிடம் தவிர்த்துவிடுங்கள். அது என்னை மட்டுமல்லாமல் எனது வேலையையும் மிகவும் பாதிக்கிறது. குறிப்பாக, எனது சிந்தனையை பாதிக்கிறது.
மாரி செல்வராஜ் எடுப்பது சாதி படமா? என்று கேட்டால் அது உங்களின் மொழி. மாரி செல்வராஜ் எடுப்பது சாதிய எதிர்ப்பு படம். அதை தொடர்ந்து எடுப்பேன். இதை நான் திமிரில் சொல்லவில்லை, உணர்வுப்பூர்வமாக சொல்கிறேன். நான் கலையை நம்புகிறவன். எனது வாழ்க்கையை கலையாக மாற்றுகிறேன். எனது கலைக்கு வெறி, ஆற்றாமை, கண்ணீர், கேள்வி, காதல் என அனைத்தும் உள்ளது” என்றார்.