‘Gembrio Pictures’ நிறுவனத்தின் சார்பில், சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இதில் அர்ஜூன்தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்கியிருக்கிறார், விஷால் வெங்கட்.
காளகம்மாய்பட்டி என்ற ஒரு கிராமம். அந்த கிராமத்தினர் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். காலப்போக்கில் இவர்களுக்குள் ஒரு பிரிவு உருவாகிறது. அதன் மூலமாக ஒற்றுமையாக வாழ்ந்த அந்த கிராம மக்கள் இருவேறு பிரிவுகளாக பிரிகின்றனர். இதில் நண்பர்களான அர்ஜூன் தாஸூம், காளிவெங்கெட்டும் பிரிகின்றனர். காளி வெங்கட்டின் தங்கையான ஷிவாத்மிகாவும் அர்ஜுன் தாஸூம் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் காளி வெங்கட் திடீரென்று இறந்து போகிறார். அசைவற்ற நிலையில், அவர் உடலிலிருந்து காற்று வெளியாகிறது. அதை தெய்வீக செயலாக கருதும் இரண்டு கிராமத்தினை சேர்ந்தவர்களும் அவரது உடலுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். இதை வைத்து அர்ஜூந்தாஸ் கிராம மக்களை ஒன்றாக இணைக்க முயற்சிக்கிறார். இதன் பிறகு என்ன நடந்த்து? என்பதே ‘பாம்’ படத்தின் திரைக்கதை.
இதுவரை டெரர் வில்லன்னாக நடித்து வந்த நாயகன் அர்ஜுன் தாஸுக்கு வித்தியாசமான கதாபாத்திரம். கிராமத்து இளைஞனாக அனைத்தையும் அடக்கி வாசித்து ஈஸியாக ரசிகர்களிடத்தில் ஸ்கோர் செய்து விடுகிறார். இந்தப்படத்தில் காமெடி செய்திருக்கிறார். அது ரசிக்கவும் செய்கிறது. அவரது நடிப்பில் இது இன்னொரு பரிமாணம்.
காளி வெங்கட், வழக்கமான நடிப்பின் மூலம் முத்திரை பதிக்கிறார். குடிகாரனாக நடித்து ஒரு நிஜமான குடிகாரனை கண்முன் நிறுத்திவிடுகிறார். நாயகியாக ஷிவாத்மிகா ராஜசேகர், கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண்ணாகவே தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். அவரது நடிப்பு அளவாகவும், ரசிக்கும்படியும் இருக்கிறது. காளி வெங்கட், ஒவ்வொரு படத்திலும் சிறந்த குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர். இந்தப்படத்தில் பிணமாக சிறப்பாக நடித்து இருக்கிறார். இதன் மூலம் மீண்டும் தன்னை பலமான குணச்சித்த்ர நடிகராக முன்னிறுத்தியிருக்கிறார். அபிராமி கலெக்ட்டராக, அந்த கதாபாத்திரத்தினை கம்பீரமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியல்வாதியாக நாசர், சிங்கம் புலி, பால சரவணன், டி எஸ் கே , கிச்சா ரவி, பூவையார், ஏ எப்புட்றா ரோகன், காவியா உள்ளிட்டோரும் கதாபாத்திரத்திகேற்றபடி நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ராஜ்குமார், காட்சிகளை அழகாக படம்பிடித்துள்ளார். இமானின் இசையில் பாடல்கள் சுமாராகவே இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுடன் ஒட்டவில்லை. மற்றபடி படத்தில் குறிப்பிட்டு சொல்வதற்கு எதுவுமில்லை.
சாதி பிரச்சனையை முன்னிறுத்தி ஒரு சுமாரான படத்தினை கொடுத்துள்ளார், இயக்குநர் விஷால் வெங்கெட்.