மேனெக்வின் (Mannequin) படத்தின் உல்ட்டாவே, பொம்மை! – விமர்சனம்!

ஏஞ்சல் ஸ்டுடியோ சார்பில், V.மாரிமுத்து பாண்டியன், Dr. ஜாஸ்மின் சந்தோஷ், Dr. தீபா துரை ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், பொம்மை. இதில், எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர், சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைத்திருக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா.

மேனெக்வின்’ஸ்கள் (Mannequin) ஜவுளிக்கடை பொம்மைகள் தயாரிக்கும் ஃபாக்டரியில், ஆர்ட்டிஸ்ட்டாக வேலை செய்து வருகிறார், எஸ்.ஜே.சூர்யா. அப்போது முகத்தில் தழும்புடன் காணப்படும் பொம்மை (ப்ரியா பவானி சங்கர்) இவரது கண்களுக்கு பெண்ணாக தெரிகிறது. அந்த பொம்மையுடன் தனது பால்ய காலத்து நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார். இதனால் அவருக்கு ஒவ்வொரு நாளும் உற்சாகமாக கழிகிறது. ஃபாக்டரியின் சூப்பர்வைசர் வழக்கமாக பொம்மைகளை விற்கும் போது அந்த பொம்மையையும் விற்று விடுகிறார். இதனால் ஆத்திரம் அடையும் எஸ்.ஜே.சூர்யா, அவரை கொலை செய்கிறார். எந்த துப்பும் கிடைகாத நிலையில் போலீஸ் கொலையாளியை தேடி வருகிறது.

இதன் பிறகு, எஸ்.ஜே.சூர்யா ஒவ்வொரு கடையாக தேடி அலைந்து, கடைசியாக சாந்தினி தமிழரசன் வேலை செய்யும் ஒரு கடையில் அந்த பொம்மை இருப்பதை கண்டறிகிறார். அவரின் துணையுடனே அங்கேயே வேலைக்கு சேர்ந்து அந்த பொம்மையுடன் பழகி வருகிறார்.

எஸ்.ஜே.சூர்யா பொம்மையுடன் ஏன் பழகுகிறார், கொலை செய்த அவரை போலீஸ் கைது செய்ததா? என்பதே, பொம்மை படத்தின் கதை.

பொம்மை திரைப்படம், 30 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ‘மேனெக்வின்’ (Mannequin) என்ற ஆங்கிலப்படங்களை சிலருக்கு நினைவூட்டலாம். ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியிருந்த இப்படத்தின் பாதிப்பில், ‘பொம்மை’ சைக்கோ த்ரில்லராக உருவாகியிருக்கிறது.

பொம்மை படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு, ரசிக்கும் படி இருக்கிறது. காட்சிகளை மேலும் சுவாரசியமாக உருவாக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருந்தும் அவர் படத்தின் பலமாக இருக்கிறார்.

பொம்மையாக நடித்திருக்கும் ப்ரியா பவானி சங்கர், அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார். அழகு!

சேல்ஸ் கேர்ளாக நடித்திருக்கும் சாந்தினி, கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினைக் கொடுத்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யாவின் நண்பராக நடித்திருக்கும் டவுட்டு செந்திலும் நடித்திருக்கிறார். மற்றபடி எதுவும் சொல்வதற்கில்லை.

ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன், பரவாயில்லை! அதிகமான குளோசப் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

இசை, யுவன் சங்கர் ராஜா. பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை! ‘உல்லாச பறவைகள்’ படத்தில் இடம்பெற்ற ‘தெய்வீக ராகம்..’ பாடலை, நவீன முறையில் வடிவமைத்து பாடியிருந்தது, ரசிக்கும் படி இருந்தது. சில காட்சிகளில் இடம் பெற்ற இந்த பாடலின் பி ஜி எம்’மும், சிறப்பாக இருக்கிறது.

மேனெக்வின், படத்தை பார்த்து ‘இம்ப்ரஸ்’ ஆன, இயக்குநர் ராதா மோகன், அதற்கான திரைக்கதையை வடிவமைப்பதில் திணறியிருக்கிறார்.

அன்பிற்கும், ஆதரவிற்கும் ஏங்கும் ஒரு சைக்கோ த்ரில்லருக்கு ஏற்ற திரைக்கதை இல்லாததால், ரசிகர்களை எந்த விதத்திலும் திருப்தி படுத்தவில்லை.

மொத்தத்தில், உணர்வற்ற திரைக்கதையில் ‘பொம்மை’.