‘பம்பர்’ மனிதநேயம் சொல்லிய படங்களின் உச்சம்! – விமர்சனம்!

வெற்றி, ஹரீஷ் பெராடி, ஷிவானி, ‘அருவி’ மதன், ஆதிரா, ஜி. பி. முத்து, திலீப் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் படம், பம்பர். எழுதி இயக்கியிருக்கிறார், அறிமுக இயக்குனர் செல்வகுமார்.

சிறுவயதிலேயே அப்பாவை இழந்த வெற்றி, தனது நண்பர்களுடன் சேர்ந்து பணம் கொள்ளையடிப்பது, ‘அரசு’ சாராயக்கடைக்கு விடுமுறை விட்ட தினத்தில், பிளாக்கில் சாராயம் விற்பதுமே இவரது தொழில்.

வெற்றியும் அவரது கூட்டாளிகளும், போலீஸ்காரர் கவிதா பாரதியின் வேண்டுகோளுக்கினங்க, கூலிக்குப் கொலை செய்ய முடிவு செய்கின்றனர். இதற்கிடையே தூத்துக்குடியில் முக்கிய புள்ளி ஒருவர் கொலை செய்யப்படுகிறார்.

இந்நிலையில் தூத்துக்குடிக்கு, புதிதாக வரும் போலீஸ் எஸ்.பி, அருவி மதன் ரௌடிகளை ஒழிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அதனால் வெற்றியும் அவரது நண்பர்களும் சேர்ந்து அய்யப்பசாமிக்கு மாலையணிந்து, சபரிமலை செல்கின்றனர்.

சபரிமலை கோவிலில் இஸ்லாமிய பெரியவர் ஹரீஷ் பெராடியிடம், கேரள அரசின் 10 கோடிக்கான பம்பர் லாட்டரி டிக்கெட்டை, வெற்றி வாங்கிக்கொண்டு ஊர் திரும்புகிறார். அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு 10 கோடி பரிசு கிடைக்கிறது.

வெற்றிக்கு இதைப் பற்றிய விபரம் எதுவும் தெரியாத நிலையில், அந்த பரிசினை பெற்றுத்தர ஹரீஷ் பெராடி முயற்சிக்கிறார். இதனால் ஒரு கும்பலலவரை கொலை செய்ய முயற்சிக்கிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பதை, சுவாரசியமான திரைக்கதையில் சொல்வது தான், பம்பர்.

பம்பர் படத்தில் கதாபாத்திரங்களுக்கான நடிகர்களின் தேர்வு சிறப்புனந்த வகையில் நடிப்பினில் முதல் இடம் பிடிப்பவர், ‘இஸ்மாயில்’ என்ற பெயரில் இஸ்லாமியப் பெரியவராக நடித்த ஹரீஷ் பெராடி. இதற்கு முன்னர் அவர் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும், இந்தப்படம் தனித்த அடையாளத்தை தரும். அவரது உடல் மொழியும், வசன உச்சரிப்பும் கதாபாத்திரத்தை உயர்த்திப்பிடிக்கிறது.

‘திருக்குர் ஆன்’ கூறும், கதைகளில் கையில் கத்தியுடன் நிற்கும் தந்தை இப்ராஹிமின் முன், எப்படி மகன் இஸ்மாயில் தடுமாறாமல் நின்றாரோ, அதே போல், லாட்டரி விற்பனை (இஸ்லாம் சட்டத்தில் இடம் இல்லை) மூலம் ஜீவனம் செய்யும் இந்த இஸ்மாயில், கடும் வறுமையின் பிடியில் குடும்பம் இருந்தாலும், நேர்மை தவறாது நின்றிருப்பது ‘இஸ்மாயில்’ என்ற பெயருக்கான தூய்மையும், பெருமையும். ஹரீஷ் பெராடிக்கு விருதுகள் கொடுத்து கௌரவிக்கலாம்.

வித்தியாசமான கதைக்களமாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் வெற்றிக்கு இந்தப்படம் சிறப்பான ஒரு அங்கீகாரத்தை தரும் படமாக இருக்கும். தூத்துக்குடி தமிழ் பேசி அசத்தலாக நடித்து இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கேற்றபடி கச்சிதமாக நடித்து இருக்கிறார்.

ஷிவானிக்கு வழக்கமான கதாபாத்திரம்! அவ்வளவே!

ஜி பி முத்து சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் சிறப்பாக வடிவமைத்திருக்கலாம்.

போலீஸ் எஸ்.பியாக நடித்த அருவி மதன், போலீஸுக்கே உரித்தான உடல்மொழியைக் கொண்டு, கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார்.

ஒளிப்பதிவும், இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது.

படமாக்கப்பட்டதில், பட்ஜெட் தொடர்பான பலவீனங்கள் தெரிந்தாலும், மனிய நேயத்தை முன்னிறுத்தி சிறப்பான திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

வெற்றியின் அம்மாவாக நடித்திருக்கும் ஆதிரா, சாராயம் விற்கும் அரசுகளை, ‘மரண’ மானபங்கம் செய்திருக்கிறார். இந்தக் காட்சியை எழுதி, படமாக்கிய இயக்குநர் எம்.செல்வகுமாருக்கு தங்க மோதிரம் அணிவிக்கலாம்.

படம் ஆரம்பித்த சில காட்சிகள், அப்படி இப்படி என பயணித்தாலும் அதற்கடுத்தடுத்த காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. க்ளைமாக்ஸ்.. ரசிகர்களின் கைத்தட்டல்களை பெறும்.

‘பம்பர்’ மனிதநேயம் சொல்லிய படங்களின் உச்சம்!