‘கடாவர்’ – விமர்சனம்!

‘அமலா பால் புரொடக்ஷன்ஸ்’  நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, தயாரித்துள்ள படம் கடாவர். அபிலாஷ் பிள்ளை  எழுதிய கதைக்கு, திரைக்கதை அமைத்து இயக்கிருக்கிறார், அறிமுக இயக்குனர் அனூப். எஸ். பணிக்கர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு  செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார்.  இத்திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ்  உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் .

‘டிஸ்னி  ஹாட் ஸ்டார்’  டிஜிட்டல் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில்  வெளியாகியிருக்கும் கடாவர் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

கடாவர் எனும் தலைப்பிலேயே ஒரு சிலருக்கு படத்தின் கதை, எதைப் பற்றியது என தெரிந்துவிடும். தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம். மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சொல் தான் ‘கடாவர்’. அதன் பொருள், மருத்துவர்கள் செயல்முறை படிப்பிற்காக பயன்படுத்தும் உயிரற்ற மனித உடல்.

கடாவர் –  ஒரு மெடிக்கல்  க்ரைம் த்ரில்லர்.  அமலாபால் (Forensic pathology) தடயவியல் நோயியலில் சிறந்த மருத்துவராகவும், கிரிமினாலஜி படித்த போலீஸாகவும் சுருக்கமா சொல்லணும்னா, அவர் ஒரு போலீஸ் சர்ஜன். மர்மமான முறையில் உயிரிழந்தவர்கள் எப்படி இறந்தனர் என்பதை வெகு சுலபமாக கண்டுபிடித்துவிடும் அசாத்திய திறமைசாலி.

ஒரு நாள் போலீஸார் காருக்குள் எரிந்த நிலையில் உள்ள ஒரு சடலத்தை கண்டுபிடிக்கின்றனர்.  அது குறித்து ஹரிஷ் உத்தமன் தலைமையிலான போலீஸ் குழு அமலாபாலின் உதவியை கோருகின்றனர். அந்த சடலத்தை பரிசோதனை செய்த அமலாபால் இது விபத்து அல்ல என்றும் கொடூரமாக தாக்கி கொலை செய்யபட்ட பிறகு எரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த கொலைகளும் நிகழ்கிறது. இந்நிலையில் ஜெயிலில் இருக்கும் திரிகுன் மீது போலீஸாருக்கு சந்தேகம் வருகிறது.

அமலாபாலும், ஹரிஷ் உத்தமனும் இணைந்து விசாரணையில் இறங்க, அடுக்கடுக்காண பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரிய வருகின்றன. கொலைகளுக்கான காரணம் யார்? என்ன? என்பது தான் கடாவர் படத்தின் சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர்!.

கதாபாத்திரங்களுக்கேற்ற நடிகர்கள் தேர்வு. முக்கியமான கதாபாத்திரத்தில் அமலாபால் சிறப்பாக நடித்திருக்கிறார். அதுல்யா ரவி சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அதுபோலவே ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ரித்விகா, என எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை பல ட்விஸ்ட்டுகளுடன் சஸ்பென்ஸ் தொடர்கிறது.

‘அனாடமி’ எனப்படும மனித உடல்களை வைத்து நடத்தப்படும் பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. டீடெயில்டு ஸ்க்ரீன்ப்ளே! ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பொருத்தமாக இருக்கிறது.

அமலாபால் என்ன தான் மார்ச்சுவரியிலேயே நீண்ட நேரம் இருந்தாலும், அவர் அங்கேயே சாப்பிடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஒரு வேளை அவர் நாற்றத்தை சகித்துக்கொண்டாலும், எளிதாக நோய் தொற்றும் அபாயம் கூட தெரியாத அவர், அடிப்படை அறிவு அற்றவரா!?

சஸ்பென்ஸ், த்ரில்லர் வகை படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு இந்தப்படம் நிச்சயமாக பிடிக்கும்.