‘கார்பன்’ விமர்சனம்!

பெஞ்ச்மார்க் ஃபிலிம்ஸ் சார்பில் பாக்யலட்சுமி, ஆனந்தஜோதி, ஶ்ரீனுவாசன் ஆகியோர் தயாரித்துள்ள திரைப்படம் ‘கார்பன்’. எழுதி, இயக்கியிருக்கிறார், ஶ்ரீனுவாசன். விதார்த், தன்யா பாலகிருஷ்ணா, மாரிமுத்து, மூணாறு ரமேஷ், வினோத் சாகர், அஜய் நடராஜ், டவுட் செந்தில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து வருபவர் நடிகர் விதார்த். ‘கார்பன்’ திரைப்படம் அவரின் நடிப்பில் வெளிவரும் 25 வது படமாகும். எப்படியிருக்கிறது? பார்க்கலாம்.

குப்பை லாரி ஓட்டிவரும் மாரிமுத்துவின் ஒரே மகன் விதார்த். எப்படியாவது போலீஸாகி விடவேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்து வருகிறார். விதார்த்திடம் ஒரு அபூர்வ சக்தி இருக்கிறது. அதாவது பின்னர் நடக்கப் போவதை முன்னரே கனவின் மூலம் அறிந்து கொள்பவர்.

இந்நிலையில் ஒரு நாள் அவருடைய அப்பா மாரிமுத்துவிற்கு ஒரு விபத்து ஏற்படுவதுபோல் விதாத்திற்கு கனவு வருகிறது. எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த விபத்தை அவரால் தடுக்க முடியவில்லை. அந்த விபத்தும் நடந்து விடுகிறது. மாரிமுத்து விபத்துக்கு முன்னர் பேசிய ஒரு ஆடியோ பதிவில் அவருக்கு நடந்தது விபத்து அல்ல. திட்டமிட்ட சதி என தெரிய வருகிறது. இதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே ‘கார்பன்’ படத்தின் கதை.

வழக்கமான த்ரில்லர் கதையினை வித்தியாசமாக சொன்னதன் மூலம் தனித்து பளிச்சிடுகிறார், இயக்குநர் ஶ்ரீனுவாசன். படம் துவங்கியது முதல் க்ளைமாக்ஸ் வரை யூகிக்க முடியாதபடி செல்கிறது. இருந்தாலும் க்ளைமாக்ஸ் காட்சியினை சிறுபிள்ளைத்தனமாக படமாக்கியிருக்கிறார்.

அப்பாவாக மாரிமுத்துவும் அவருக்கு மகனாக விதார்த்தும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மறுபடியும் கனவு வந்து கொலை செய்ய முயற்சிப்பவனை கண்டுபிடித்து விடமாட்டோமா என விதார்த் தவிக்கும் போது நன்றாக நடித்துள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் தன்யா பாலாகிருஷ்ணா, இருவேறுபட்ட நடிப்பினில் அவரது கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்க்கிறார்.

காவலராக நடித்திருக்கும் மூணாறு ரமேஷ், வினோத் சாகர், அஜய் நட்ராஜ் என படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் கதையோடு பயணிக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவு, சாம் சி.எஸ் இசை,  பிரவீன் கே.எல் எடிட்டிங் மூன்றும் படத்தின் விறுவிறுப்பினை  கூட்டியிருக்கிறது.

சஸ்பென்ஸ், த்ரில்லர் படங்கள் பார்க்கும் அனைவருக்கும் இந்த ‘கார்பன்’ நிச்சயம் பிடிக்கும்!