அருண் ரங்கராஜுலு தயாரித்து, ராம் சக்ரி எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், கார்மேனி செல்வம். இதில் சமுத்திரக்கனி, லட்சுமி பிரியா, சிறுவன் கரன் சக்கரவர்த்தி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், அபிநயா, படவா கோபி, கார்த்திக் குமார், கோதண்டம், மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா, ஜெயந்தி, பேபி கே லயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, யுவராஜ் தக்ஷன். இசை, சர்வீஸ் மியூசிக்லவ்டு ஸ்டுடியோ அண்ட் டெக்னாலஜி.
கடற்கரை ஒட்டியுள்ள குப்பத்தில், சமுத்திரக்கனி, லட்சுமி பிரியா, கரன் சக்ரவர்த்தி ஆகியோர் குடும்பமாக வசித்து வருகின்றனர். சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனனிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். லட்சுமி பிரியா தள்ளு வண்டி உணவுக் கடை நடத்தி வருகிறார். சந்தோசமாக இவர்களது வாழ்க்கை செல்கிறது. இன்ஸுரன்ஸ் ஏஜன்ட் கார்த்திக் குமாரின் ஒரு யோசனை மூலம், சமுத்திரக்கனி பெரும் கடனாளி ஆகிறார். மொத்தக் குடும்பத்தின் சந்தோஷம் பறிபோகிறது. அவர், அப்படி என்ன சொன்னார்? தொலைந்து போன குடும்பத்தின் சந்தோஷம் மீண்டும் திரும்பியதா? என்பதே ‘கார்மேனி செல்வம்’.
கிடைப்பதைக் கொண்டு, அத்தியாவசிய வாழ்க்கையை சந்தோஷமாக வாழவேண்டும். அதை விடுத்து, ஆடம்பரமாக வாழ்வதும், மற்றவர்களுக்காக பெருமையாக வாழ நினைப்பதும், வாழ்வில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். என்பதை, தவறான வழிகாட்டுதலுடன், குழப்பமாக சொல்லியிருக்கிறார், இயக்குநர் ராம் சக்ரி.
அப்பாவியான, மற்றவர்களின் உடைமைகளுக்கு ஆசைப்படாத, உழைப்புக்கேற்ற ஊதியம் என வாழும் நேர்மையான ‘செல்வம்’ கதாபாத்திரத்தில் நடித்து, பார்ப்பவர்களின் மனம் நிறைகிறார், சமுத்திரக்கனி. எல்லோரையும் போல் வசதியான வாழ்க்கை வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, முயற்சிகளில் தோல்வி, முதலாளி குடும்பத்திடம் காட்டும் பாசம், அவமானப் படுத்தப்படுவோம் என தெரிந்தும் சொந்தக்காரரிடம் உதவி கேட்டு நிற்பது உள்ளிட்ட அனைத்து காட்சிகளிலும் சிறப்பான நடிப்பு.
சராசரி குடும்பப் பெண்களின் எதிர்பார்ப்பு, ஆசைகளோடு ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை நடத்தி வரும் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி மனைவியாக லட்சுமி பிரியா. சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.
கெளதம் வாசுதேவ் மேனன், அபிநயா, சிறுவன் கரண் சக்கரவர்த்தி, படவா கோபி, கார்த்திக் குமார், கோதண்டம், மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா, ஜெயந்தி, பேபி கே லயா ஆகியோரும் கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷனின் ஒளிப்பதிவு, சர்வீஸ் மியூசிக்லவ்டு ஸ்டுடியோ அண்ட் டெக்னாலஜியின் இசை ஆகிய இரண்டும் படத்தின் பலம்.
மெதுவாக நகரும் திரைக்கதையும், நம்பகமில்லாத காட்சிகளும் படத்தின் பலவீனம். குறிப்பாக கிரடிட் கார்டு வாங்குவது, 5 ஸ்டார் ஹோட்டலுக்கு செல்வது போன்ற காட்சிகள்.
தேவையற்றதை தேடிப்போனால், தேவையானதை இழக்க நேரிடம். என சொல்வதற்காகவும், படத்தில் ஒரு காட்சிக்கூட புகைபிடிக்கும் காட்சிகளோ, மது குடிக்கும் காட்சிகளோ இடம்பெறாமல் செய்ததற்காக இயக்குநர் ராம் சக்ரியை பாராட்டலாம். அதேவேலை, கஷ்டபட்டாலும் வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டாம். என்ற அவருடைய கருத்து ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. அவருடைய ‘செல்வம்’ கதாபாத்திரம், சொந்த நாட்டில் தொலைத்த செல்வங்களை வெளிநாட்டில் தான் மீட்டது. இப்படியிருக்க, அவர் வெளி நாட்டு வேலை வேண்டாம் என சொல்வது முரண்.
ஒளவைப் பாட்டியே, ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று தான் சொல்லியிருக்கிறார்!
‘கார்மேனி செல்வம்’ – தவறான கருத்தை சொல்லும், முரணான படம்!