சென்சார் பிரச்சனை! ஞானவேல்ராஜா – லிப்ரா’ரவீந்திரன் குஷி!

‘மூன் பிக்சர்ஸ்’ சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்குனராக அறிமுகமாகவுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’.

இவர் திரைவிமர்சனங்களை கேலிசெய்து விமர்சிக்கும் தனித்தொனியின் மூலம் ரசிகர்களிடையே பெரும் செல்வாக்குடன் இருந்து வருபவர். சென்சாரில் நீண்ட போரட்டங்களுக்கு பிறகு மூன்று கரெக்சன்களுடன் அவரது படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதுகுறித்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவாவும், இயக்குனர் இளமாறனும் கூறியதாவது..

முதலில் பேசிய இயக்குனர் (புளூ சட்டை மாறன்) இளமாறன்..

‘முதலில் சென்னை தணிக்கை குழுவினருக்கு படத்தை திரையிட்டு காட்டினோம். எப்படியும் பாராட்டுவார்கள் என நினைத்திருந்தோம். எந்த காரணமும் சொல்லாமல் படத்திற்கு சான்றிதழ் தர மறுத்துவிட்டனர்.

இதையடுத்து ரிவைசிங் கமிட்டிக்கு சென்றோம். பெங்களூரில் நாகபரணா என்பவர் தலைமையில் படத்தை பார்த்துவிட்டு படத்தில் 38 இடங்களில் கட் பண்ணவேண்டும். என்றும் அதற்கு ஒப்புக்கொண்டால் சான்றிதழ் தருகிறோம். என்றும் சொன்னார்கள். எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை.

அதனால் அடுத்த முயற்சியாக ட்ரிபியூனலில் முறையிடுவது என முடிவெடுத்தோம்.. ஆனால் எங்களது துரதிர்ஷ்டமோ என்னமோ, எங்கள் படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமயத்தில் தான் அத்தனை வருடங்களாக இயங்கிவந்த அந்த அமைப்பையே கலைத்து விட்டார்கள்.

இறுதியாக ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தை நாடினோம். எங்களது தரப்பு நியாயங்களை கேட்ட நீதிமன்றம், அதற்கு முன்னதாக தணிக்கை குழு மற்றும் ரிவைசிங் கமிட்டி என இரண்டு தரப்பிலும் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய உத்தரவிட்டது.. மேலும் புதிதாக ஒரு கமிட்டி ஒன்றை அமைக்க கூறிய நீதிமன்றம், முறையான கட்டுக்களுடன் கூடிய சான்றிதழை வழங்கவும் உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து படத்தை பார்த்த புதிய கமிட்டியினர் வெறும் மூன்றே இடங்களில் சிறிய கரெக்சன்களை மட்டுமே செய்யவேண்டும் என கூறி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினார்கள். இப்போது ரிலீஸூக்கு ரெடியாகியிருக்கிறது.

இது ஒரு புறமிருக்க, ‘ஸ்டுடியோ க்ரீன்’ ஞானவேல்ராஜாவும் ‘லிப்ரா’ புரடக்‌ஷன் ரவீந்திரனும் படம் சென்சார் பிரச்சனையில் இருக்கும் போது அதை கொண்டாடினார்கள். படம் எப்படியும் வெளியே வரக்கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள். சக தயாரிப்பாளரின் படம் வெளியாக முடியாத நிலையில் இருக்கும்போது எப்படி கொண்டாடுகிறார்கள் இவர்கள் என்ன மனிதர்கள் என தெரியவில்லை. என்றார்.