சக்ரா – விமர்சனம்

ஆக்‌ஷன் படங்களுக்கான அத்தனை தகுதிகளையும் உடைய ஹீரோக்களில் முக்கியமானவர் விஷால். மிலிட்டரி, போலீஸ் இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் கச்சிதமாக பொருந்தக்கூடியவர்.

அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால், மிலிட்டரி ஆஃபீஸராக  நடித்துள்ள ‘சக்ரா’ எப்படியிருக்கிறது?

இந்திய நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சென்னையில் முகமூடி திருடர்கள் தொடர் கொள்ளையடிக்கின்றனர். இதில் மிலிட்டரி ஆஃபிஸரான விஷால் வீடும் தப்பவில்லை.

விஷாலின் வீட்டை சூறையாடும் கொள்ளையர்கள், மிக உயரிய, வீரதீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற உயிர்த்தியாகத்திற்காகவும் அவரது அப்பாவுக்காக வழங்கப்பட்ட ‘அசோகச் சக்ரா’ விருதையும் கொள்ளையடித்துச் செல்கின்றனர்.

போலீஸ் அதிகாரி ஸ்ரத்தா ஶ்ரீநாத்தும். அவருக்கு உதவியாக மிலிட்டரி ஆஃபிஸர் விஷாலும் கொள்ளையர்களை ஷேசிங் செய்வது தான் ‘சக்ரா’ படத்தின்  திரைக்கதை.

முதல் காட்சியிலேயே மோடி மாதிரி தோற்றம் கொண்ட ஒருவர் வீடும் கொள்ளையடிக்கப்படுகிறது. அந்த நிலையில் அவர் கதுறும் போது, ரசிகர்கள் ஆர்பரித்து சந்தோஷப்படுகின்றனர்.

போளீஸ் ஸ்டேஷனுக்கு டீ சப்ளை செய்யும் சிறுவன் சுதந்திர தினத்தன்று, ‘சாயங்காலம் 4 மணிக்குள்ள கையிலிருக்க கொடியெல்லாம் வித்தடுனும் சார். இல்லன்னா ஒரு பயலும் வாங்க மாட்டானுங்க..’ என சொல்லும்போதும், எங்கேயோ ஒரு தப்பு நடப்பது தெரிகிறது

விஷாலின் தோற்றமும், நடிப்பும்  திரைக்கதைக்கு சற்று பலமே.

ரெஜினா கஸான்ட்ரா படத்தின் முக்கியமான கேரக்டர். அவருக்கான இண்ட்ரஸ்டிங் காட்சிகள் குறைவு. அவரின் நண்பராக வரும் அமித் பார்கவ் கதாபாத்திரம் எதற்கு?  என்று புரியவில்லை.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் பின்னணி இசை ஓகே. சில இடங்களில் பிரமாதப் படுத்துகிறது.

ஆக்‌ஷன் காட்சிகளை அமர்களப்படுத்துகிறது, பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு.

விஷாலின் மூலம்,  சமூக அக்கறையுடனான காட்சிகளை ஆங்காங்கே வைத்து இயக்குனர் ஆனந்த் கைதட்டல் பெறுகிறார். உதாரனமாக ஏடிஎம் செக்யூரிட்டியுடனான காட்சியை சொல்லலாம்.

ரெஜினா கஸான்ட்ராவின் ஓபனிங் காட்சிகள் மாஸாக இருந்தாலும், க்ளைமாக்ஸ் ஏமாற்றம்.

டிஜிட்டல் யுகத்தில் நடைபெறும் தில்லுமுல்லுவில் மக்களை எச்சரிக்கும் ஒரு படமாக வந்துள்ள ‘சக்ரா’ படத்தை பார்க்கலாம்!