‘சஹஸ்ரா கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் அஜய், ஞானேஸ்வரி, விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு உள்ளிட்ட பலரது நடிப்பினில், அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கும் படம், சக்ரவியூகம். ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ வெளியிட்டுள்ளனர்.
சக்டவியூகம் திரைப்படத்தினை இயக்குநர் சேத்குரி மதுசூதன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.அஜய் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் பாரத் மஞ்சிராஜு இசையமைத்துள்ளார்.
சஞ்சய் ராவின் (விவேக் திரிவேதி) மனைவி ஶ்ரீ (ஊர்வசி) மர்மமான முறையில் அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார். போலீஸ் விசாரணை அதிகாரி எஸ்ஐ சத்யா, இந்த கொலைக்கு ஶ்ரீயின் கணவர் சஞ்சய் ராவ் காரணமாக இருப்பதாக அறிகிறார். அதே சமயத்தில் சஞ்சய் ராவின் நெருங்கிய நண்பரும், தொழில் பங்குதாரருமான ஷரத்தின் மீதும் சந்தேகம் ஏற்படுகிறது.
இந்த மர்மக்கொலையை தொடர்ந்து பல கோடி மதிப்புள்ள பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிகிறது. இதற்கு காரணமானவர் யார்? என துப்பு கிடைக்காமல் போலீஸார் விழி பிதுங்கி நிற்கையில், ஶ்ரீயின் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் மீதும் சந்தேகம் ஏற்படுகிறது.
சஞ்சய் ராவின் மனைவி ஸ்ரீயை உண்மையில் கொன்றது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதே சக்ரவியூகம் படத்தின் பரபரப்பான திரைக்கதை.
அபடம் ஆரம்பித்து கொலைக்கான காரணம் தேடி கொலையாளியை பின் தொடருவதில் இருந்து, அடுத்தடுத்து எதிர்பார்க்க முடியாத திருப்பங்கள், அதிரடி சண்டைக்காட்சிகளோடு படம் வேகமெடுக்கிறது. ஒவ்வொரு காட்சியிலுமே இசையும், ஒளிப்பதிவும் அந்தக்காட்சியை மேம்படுத்துகிறது.
இது ஒரு க்ரைம் த்ரில்லராக மட்டுமில்லாமல் நல்ல கருத்தையும் சொன்ன விதத்தில், இயக்குநர் சேத்குரி மதுசூதனை பாராட்டலாம்.
கதையின் தன்மைகேற்ப கதாபாத்திரம் உணர்ந்து, அஜய், விவேக் திரிவேதி, ஊர்வசி ஆகியோர் அந்தந்த பாத்திரங்களில் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
சினிமா ரசிகர்கள் மத்தியில் துப்பறியும் கதைகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. அதை உறுதி செய்யும் வகையில், அன்மையில் வெளியான “சக்ரவியூஹம்” திரைப்படத்திற்கும் கிடைத்துள்ளது.
துப்பறியும் மர்மக்கதை பிரியர்களுக்கு சக்ரவியூகம் பிடிக்கும்.