லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது…
‘வைகைப்புயல்’ வடிவேல் பேசுகையில்,
” ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும் போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பது தான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுக்கு சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால் கலைஞர்களாகிய நாங்கள் இல்லை.
இதற்கு முதல் படம் மாமன்னன் மிகப்பெரிய வெற்றி படம். அதன் பிறகு அதைவிட பெரிய வெற்றி படம் சந்திரமுகி 2. இந்த ரெண்டு படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அந்தப் படத்துல பார்த்த வடிவேலு இந்த படத்தில் இருக்க மாட்டாரு. இந்த படத்துல பார்க்க போற வடிவேலு வேற..
முதல்ல ஒரு விசயத்தை சொல்லிடுறேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்ன வரவிடாம கதவை பூட்டு போட்டு சாவிய தூக்கிட்டு போயிட்டாங்க. உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லன்னாங்க. அதுக்கு என்ன காரணம்கிறது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கதவை உடைத்து புது சாவிய கொடுத்து வாழ்க்கையை தொடங்கி வைத்தவர் எங்க அண்ணன் சுபாஷ்கரன். நான் குலதெய்வமா கும்பிடுவது அய்யனாரு, கருப்பன். அந்த ரெண்டு தெய்வத்துக்கு பிறகு தெய்வமா நான் அண்ணன் சுபாஷ்காரன தான் வணங்குறேன். யாரு என்ன சொன்னாலும்.. என்ன மறுபடியும் சினிமால நடிக்க வைத்தவர் அண்ணன் சுபாஷ்கரன் தான். இதற்கு அன்புத்தம்பி தமிழ் குமரன் ரொம்ப உதவியா இருந்தாரு.
மாமன்னன் படத்த முடித்த பிறகு பெரிய டைரக்டரரான பி. வாசு சார் என்னை கூப்பிட்டார். அவர் படத்துல நிறைய கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அவருக்கு இப்போ 70 வயசு ஆகுது. வயசு தான் 70 ஆவது தவிர 35 வயசு மாதிரி இருக்காரு.
என்னை ஒரு ஹோட்டலுக்கு வரவழைச்சி, சந்திரமுகி 2 படத்தின் கதையை மூன்று மணி நேரம் சொன்னார். பொதுவா வாசு சார் யாரிடமும் கதை சொல்ல மாட்டார். ஒன்லி லைனை மட்டும்தான் சொல்வார்.இதுவரைக்கும் அவர் அப்படி என்னிடம் கதை சொன்னதேயில்லை. அந்தக் கதையைக் கேட்டு அப்படி ஆடிப் போய்விட்டேன்.
அப்புறம் இதனை நான் தமிழ் குமரனிடம் சொல்ல.. அவர் சுபாஷ்கரனிடம் சொல்ல.. சுபாஷ்கரன் இதற்காகவே லண்டனிலிருந்து சென்னைக்கு வந்து கதையை கேட்டு ஓகே சொல்லி தொடங்கப்பட்ட படம் தான் சந்திரமுகி 2.
சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த முருகேசனாகத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்த முருகேசன் என்ன பாடு படுகிறார் என்பதனை படத்தில் பார்த்து ரசிக்கலாம். குரூப்பு மாறிடுச்சு.
இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவரும் கூட்டாக இணைந்து கஷ்டப்பட்டு உழைச்சிருக்காங்க. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். வாழ்த்துக்கள். இந்தப் படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிய சுவாரசியமான பல விசயங்களை வெற்றி விழாவில் சொல்றேன் ” என்றார்.
இயக்குநர் பி. வாசு பேசுகையில்,
‘ரஜினி சாரிடம் சந்திரமுகி 2 படத்தின் கதையை சொன்னேன். அவர் ராகவா லாரன்ஸை உடன்பிறந்த தம்பியாகவே பார்ப்பார். அனைத்தையும் கேட்ட பிறகு, ‘நான் வணங்கும் என் குருவை வேண்டிக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்’ என வாழ்த்தினார்.
அவரிடம், ‘ஒன்று இல்லை என்றால், இரண்டு இல்லை. அந்த ஒன்று நீங்கள் தான். தற்போது இரண்டு தயாராகி இருக்கிறது’ என்றேன். இப்படித்தான் இந்த படம் தொடங்கியது.
தமிழ் குமரனிடம் இப்படத்தின் இரண்டு வரி கதையைத்தான் சொன்னேன். உடனே சரி படத்தின் பணிகளை தொடங்கலாம் என்றார். அதன் பிறகு கதையை உருவாக்கி, வடிவேலுவிடம் சொன்னேன். நான் இதுவரை அவரிடம் முழு கதையையும் சொன்னதில்லை. ஏனெனில் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையே உள்ள ஒரே தொடர்பு வடிவேலு மட்டும் தான். சந்திரமுகி படத்தின் வெற்றிக்கு வடிவேலுவும் ஒரு காரணம் என்பதால், அவர் சந்திரமுகி 2 படத்திலும் இருக்க வேண்டும் என விரும்பினேன்.
அவர் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்திலேயே நான் இதில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். ஏனெனில் அவரைப் போன்ற திறமையான கலைஞர்கள் எல்லாம் வீட்டில் சும்மா உட்கார வைக்க கூடாது. அவர் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தால்.. மக்களுக்கு நோய் வந்து விடும். அவர் மக்களை சிரிக்க வைத்தவர். அவரைப் பார்த்து நாம் சிரித்து சிரித்து நோயில்லாமல் வாழ்கிறோம். அந்த வகையில் பார்த்தால் அவர் ஒரு டாக்டர். கொரோனா காலகட்டத்தின் போது எத்தனை குடும்பங்களை அவர் சிரிக்க வைத்திருப்பார். அவரைப் போன்ற நடிகர்களை நமக்கு கிடைத்திருப்பது நாம் செய்த பெரும் பாக்கியம்.
ராதிகா என்னுடைய இயக்கத்தில் முதன்முறையாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு அவர் தான் பொருத்தமாக இருப்பார். இந்தப் படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு சின்ன கதை இருக்கும். அனைவருக்கும் நடிப்பதற்கு வாய்ப்பும் கொடுத்திருக்கிறேன்.
நடிகர் விக்னேஷ், நடிகர் ரவி மரியா போன்றவர்களுக்கு எல்லாம் நான் வாய்ப்பளித்திருக்கிறேன். இப்படத்தின் மூலமாக அவர்கள் தொடவிருக்கும் உயரம் இன்னும் அதிகம்.அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான நடிகரை தேர்வு செய்தாகிவிட்டது சந்திரமுகியை தவிர.
சந்திரமுகி நடிக்கவிருப்பது யார்? என்ற கேள்வி எங்களுக்குள் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த நேரத்தில் கங்கனாவை வேறொரு விசயத்திற்காக சந்திக்க சென்றேன். அப்போது சந்திரமுகி குறித்து கேட்டார். பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பதிலளித்தேன். சந்திரமுகியாக நடிப்பது யார்? என கேட்டார். இன்னும் யாரையும் உறுதிப்படுத்தவில்லை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றேன். ஆச்சரியமடைந்த அவர், ஏன் நான் அந்த பாத்திரத்தில் பொருத்தமாக இருக்க மாட்டேனா? நான் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது? என கேட்டார். அவர் இதுவரை யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதே இல்லை. அதைவிட சிறப்பம்சம் என்னவென்றால் அவர் முதல் நாள் படப்பிடிப்புக்கு வரும்போது அவர் என்ன கெட்டப்பில் நடிக்கப் போகிறார் என்று அவருக்குத் தெரியாது. இதன் பிறகு தான் அவருக்கு நான் கதையை முழுவதுமாகச் சொன்னேன்.
இவை எல்லாத்தையும் விட எனக்கு கிடைத்த சிறந்த வேட்டையன் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தில் அவரை இரண்டு கோணங்களில் பார்க்கலாம். ஒன்று.. குடும்பம், பாசம், சிரிப்பு, சந்தோஷம் என்றிருக்கும். வேட்டையன் என்றால் வேட்டையன் மட்டும் இருக்க மாட்டான். அவனுள் இன்னொருத்தனும் இருக்கிறான். அது யார்? என்பது நீங்கள் படம் பார்க்கும்போது தெரியும்.
மாஸ்டர், ராஜா வேஷம் போட்டு நடிக்கும் போது அவர் பேசும் தமிழ் எப்படி இருக்கும்? என்பது எனக்கு சற்று சந்தேகமாக இருந்தது. ஏனெனில் அவர் ஜாலியாக.. ஸ்லாங்குடன் தமிழ் பேசுவார். “அவளை பார்த்ததற்கே… அவள் மீது உனக்கு ஆசை வந்துவிட்டது என்றால்.. அவளைத் தொட்டு.. என் விரல் பட்டு.. அவளை அணைத்து.. தூக்கி வந்த எனக்கு.. எப்படி இருக்கும்..? என்ற வசனத்தை அவர் எப்படி தமிழில் பேசுவார் என்று தயங்கினேன். ஆனால் அவர் அனைவரும் ஆச்சரியப்படும்படி பேசியிருக்கிறார். அதனை நீங்கள் படம் பார்க்கும்போது தெரியும்.
நான் எப்போதும் படத்தை தொடங்கும் போது கடவுளிடம் வேண்டுவேன். படம் வெளியாகும் போது திரையரங்கத்திற்கு சென்று மக்களான தெய்வங்களை வணங்குவேன்.
ஆஸ்கார் விருது வாங்கிய பிறகு அமைதியாக இரண்டாவது ரகுமானாக உட்கார்ந்திருக்கும் என்னுடைய இசையமைப்பாளர் கீரவாணிக்கும் வாழ்த்துக்கள்.
சந்திராயன் 3 விண்ணில் ஏவிய இந்திய விஞ்ஞானிகளுக்கு சந்திரமுகி 2 பட குழுவின் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”என்றார்.
நடிகை கங்கனா ரனாவத் பேசுகையில்,
” அருமையான மாலை வேளை. பிரம்மாண்டமாகவும் அழகாகவும் நடைபெறும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, வண்ணமயமான அனுபவங்களை வழங்கியதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய வாழ்க்கையில் நான் இதுவரை யாரிடமும் எந்த கதாபாத்திரத்தையும் நடிப்பதற்காக விரும்பி கேட்டதில்லை. இயக்குநரிடம் சந்திரமுகியாக நடிக்க நான் பொருத்தமாக இருப்பேனா? என கேட்டேன். சிறிது நேர யோசிப்பிற்குப் பிறகு அவர் சரி என்று ஒப்புக்கொண்டார்.
படப்பிடிப்பு தளத்தில் சந்திரமுகி எப்படி நடப்பார்.. என்பது குறித்தும் அவர் துல்லியமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்து நடந்தேன்.
இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் என்னை வியப்பில் ஆழ்த்தியவர். திரைப்படத்துறையில் நடன கலைஞராக அறிமுகமாகி, நடன உதவியாளராகவும், நடன இயக்குனராகவும்.. பிறகு நடிகராகவும்.. பிறகு இயக்குநராகவும் கடினமாக உழைத்து முன்னேறியவர். அவர் எப்போதும் கனிவாக நடந்து கொள்ளக் கூடியவர். மென்மையான இதயம் கொண்டவர். படப்பிடிப்பு தளத்தில் முதன்முறையாக சந்தித்தபோது கங்கனா மேடம் என்றார். அதன் பிறகு இரண்டாவது நாள் கங்கனா என்றார். மூன்றாவது நாள் ஹாய் கங்கு என அழைத்தார்.
நான் வடிவேலு சாரின் மிகப்பெரிய ரசிகை. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாது. இந்தப் படத்தில் நான் மூன்று பாடலுக்கு நடனமாடியுள்ளேன். இதுவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.” என்றார்.
ராகவா லாரன்ஸ் பேசுகையில்,
‘என்னுடைய அறக்கட்டளைக்கு யாரும் நிதி உதவி வழங்க வேண்டாம் என்று ஓராண்டிற்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தேன். ஏனெனில் நான் தற்போது நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைக்கும் வருவாயில் அறக்கட்டளைக்கு தேவையான நலத்திட்ட பணிகளை செய்து கொண்டிருக்கிறேன். வேண்டாம் என்று சொல்லும் போது.. கடவுள் கொடுப்பார் என்று சொல்வார்கள்.
அது போல் தற்போது சுபாஷ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறார். அவருடைய மனம் பெரியது. இதன் மூலம் நிறைய பேரின் பசி தீர்க்கப்படும். மாணவர்கள் தங்குவதற்கும், நடன பயிற்சி மேற்கொள்வதற்கும் ஒரு இடத்தை வாங்கி, அவர்களுக்கான கட்டிடம் ஒன்றை கட்டி, அதற்கு உங்களின் தாயாரின் பெயரை சூட்டுவோம். இவை அனைத்தும் இன்னும் ஒரு வருடத்தில் நிறைவேறும் என உறுதியளிக்கிறேன்.
சந்திரமுகி படத்தின் கதையை முதலில் தமிழ்குமரன் கேட்டார். அதன் பிறகு தமிழ் குமரன் என்னை தொடர்பு கொண்டு சுபாஸ்கரன் சென்னைக்கு வருகிறார். அவர் ஒரு முறை சந்திக்கலாமா..? என கேட்டார். சரி என்று ஒப்புக்கொண்ட பிறகு, என்னுடைய மனதில் சுபாஷ்கரன் பெரிய தொழிலதிபர். ‘2.0’, ‘இந்தியன் 2’ என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர்.. என கற்பனையாக ஒரு அணுகுமுறையை எதிர்பார்த்திருந்தேன். அவரை சந்திக்க அவரது அறைக்குள் நுழைந்ததும். அவர் ஆசையுடன் தம்பி என்று சொல்லிக் கொண்டே என்னை ஆரத் தழுவிக்கொண்டார். அவருடைய கட்டிப்பிடித்தலிலேயே அவருடைய அன்பை முழுவதுமாக உணர்ந்தேன். அந்தத் தருணத்தில் அங்கு வருகை தந்த மற்றவரிடம் அதே விருந்தோம்பலும், அன்பையும் செலுத்தினார். அப்போதுதான் எனக்கு ஒரு விசயம் புரிந்தது. அவர் வயது வித்தியாசம் எதுவுமின்றி அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்.
நான் திரைத்துறையில் நடன கலைஞராக பணியாற்றியபோது பி வாசு இயக்குநர். உதவி நடன இயக்குநராக நான் பணியாற்றிய போதும் அவர் இயக்குநர். நான் நடன இயக்குநராக பணியாற்றிய போதும் அவர் இயக்குநர். நான் வில்லனாக நடித்த போதும் அவர் இயக்குநர். அதன் பிறகு நான் இயக்குநராக மாறிய போதும்,, அவர் இயக்குநராக இருந்தார். நான் நடிகராக நடித்துக் கொண்டிருக்கும் போது அவர் இயக்குநராகவே இருக்கிறார். இந்த படத்தை நான் இயக்குவதற்காக திட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த படத்தில் நான் ஹீரோவாக நடித்திருக்கிறேன். அவர் இயக்கிருக்கிறார். தொடர்ச்சியாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான இயக்குநராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் பி வாசுவின் இயக்கத்தில் நான் நடித்ததை பெருமிதமாக கருதுகிறேன். இந்த படத்தில் நான் வேட்டையனாக நடித்திருக்கிறேன். வேட்டையன் கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் புகழ் அனைத்தும் இயக்குநர் பி. வாசுவைத் தான் சாரும்.
என்னுடைய டென்ஷன் அனைத்தையும் குறைப்பவர் வடிவேலு அண்ணன். அவருடைய காமெடிகள் தான் என்னை என் டென்ஷனை குறைக்கும். அவரை இயக்குநர் பி வாசு சார் டாக்டர் என்று சொன்னது மிகச் சரி. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம்.
சந்திரமுகியாக கங்கனா நடிக்கப் போகிறார் என வாசு சார் சொன்னவுடன், அவர் மிகவும் துணிச்சல் மிக்கவர். சமூக வலைதளங்களில் தீவிரமாக தனது கருத்தை பதிவு செய்பவர். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர். படப்பிடிப்பு தளத்தில் அவரும் கலாட்டா செய்வார். மகிழ்ச்சியாக இருப்பார். உற்சாகத்துடன் இருப்பார். நான் பழகியதில் குழந்தை உள்ளம் கொண்ட நடிகை என கங்கனாவை சொல்லலாம் அவர் இந்த படத்தில் நடித்திருப்பது படத்திற்கு பலம். ” என்றார்.