‘சந்திரமுகி 2’ விமர்சனம்!

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா மற்றும் ஜி. கே. எம். தமிழ்க்குமரன் தயாரித்துள்ள படம், சந்திரமுகி 2. இதில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ஸ்ருதி டாங்கே, சுபிக்‌ஷா, சுரேஷ் மேனன், ரவி மரியா, விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் பி.வாசு இயக்கியிருக்கிறார்.

சந்திரமுகி 2, ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்பினில் வெளியாகியிருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பினில் வெளியாகி வெற்றி பெற்ற சந்திரமுகி படத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு? எப்படியிருக்கிறது? பார்க்கலாம்.

தொழிலதிபர் ராதிகா சரத்குமார் குடும்பத்தில், அடுக்கடுக்கான கெட்ட விஷ்யங்கள் நடக்கின்றன. நிலைகுலைந்து போன அவருக்கு, சாமியார் ராவ் ரமேஷ் ஒரு பரிகாரத்தினை சொல்கிறார். குல தெய்வத்தை கும்பிடாமல் போனதாலேயே இந்த மாதிரியான கெட்ட விஷயங்கள் நடப்பதாகவும், அந்த கெட்ட விஷயங்கள் அழிந்து நல்ல விஷயங்கள் நடப்பதற்கு, குல தெய்வம் இருக்கும், ராதிகாவின் சொந்த ஊருக்கு சென்று அந்த கோவிலை புனரமைத்து வழிபாடு செய்தால், நல்ல விஷயங்கள் நடக்கும் என கூறுகிறார்.

சாமியார், ராவ் ரமேஷின் யோசனைப்படி, ராதிகாவின் மொத்த குடும்பமும் குலதெய்வம் இருக்கும் கோவிலுக்கு செல்கிறது. அங்கே, மொத்த குடும்பமும் தங்குவதற்கு ‘சந்திரமுகி’ பங்களாவின் வீட்டு உரிமையாளர் வடிவேலுவின் அனுமதியுடன், அந்த வீட்டில் தங்குகின்றனர். குலதெய்வக் கோவிலில் பூஜை செய்ய, ஆயத்தம் செய்யும்போது ஒரு அமானுஷ்ய சக்தி அதை தடுக்கிறது. அதை மீறி பூஜை செய்தார்களா, இல்லையா? என்பதே சந்திரமுகி 2 படத்தி கதை!

சந்திரமுகி படத்திற்கு சந்திரமுகி 2 படத்திற்கும் அதிக வித்தியாசமில்லை! அதே காட்சிகளையும், பாடல்களையும் கூட ரீ கிரியேட் செய்திருப்பதைப் போலவே இருக்கிறது.

ராகவா லாரன்ஸ், ஃப்ரேமுக்கு ஃப்ரேம் ரஜினிகாந்தினை இமிடேட் செய்திருக்கிறார். எதார்த்தமாக நடித்தது போல் இல்லை! திட்டமிட்டு நடித்திருப்பதாகவே தெரிகிறது. அவர், காமெடியில் ரசிகர்களின் கழுத்தை அறுக்கிறார். ஆனால், வேட்டையனாக நடித்து ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறார்.

சந்திரமுகியாக மொத்தப் படத்தையும் தாங்கிப்பிடித்த ஜோதிகா போல், சந்திரமுகி வேடத்தில் நடித்திருக்கும் கங்கனா ரணாவத்தால் அது முடியாமல் போயிற்று. ரசிகர்களுக்கு அந்நியப்பட்டு நிற்கிறார். பேரழகியாக வர்ணிக்கப்படும் சந்திரமுகி கதாபாத்திரம் அவருக்கு பொருந்தவில்லை.

நீண்ட நாட்கள் காணாமல் போயிருந்த லட்சுமி மேனனை, இப்படத்தினில் கொண்டு வந்திருக்கிறார்கள். அவரைக்காட்டும் போதே அவருடைய கதாபாத்திரத்தின் தன்மை புரிந்து விடுகிறது.

வடிவேலு நடித்த சில காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அதிலும், வேட்டையன் மற்றும் சந்திரமுகியிடம் அவர் பேசும் காட்சிகள் சிறப்பு. ஆனால், அவரிடம் இன்னும் எதிர்பார்த்து வந்த, அவரது ரசிகர்களை ஏமாற்றி விட்டார்!

நட்சத்திர பட்டாளங்களை குவித்து வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல், முடிந்த வரை பயன் படுத்தியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், காட்சிகளை பிரமாண்டமாக, படம் முழுவதையும் கலர் ஃபுல்லாக காட்சிப்படுத்தி, வாய்பிளந்து பார்க்க வைக்கிறார்.

எம்.எம்.கீரவாணியின் இசையில் பாடல்கள் எல்லாம், வித்யா சாகரை நினைவூட்டுகிறது. பின்னணி இசை காட்சிகளுக்கேற்ப இருக்கிறது.

இயக்குனர் பி.வாசு முதல் பாகத்தினை, ஆங்காங்கே சிறிது மாற்றி அமைத்திருப்பதால், ரசிகர்கள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட வாய்ப்புண்டு!

மற்றபடி, சந்திரமுகி 2 படத்தினை குடும்பத்துடன், பார்த்து ரசிக்கலாம்.