சேரனுக்கு தலையில் 8 தையல்கள். புதிய கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்தது எப்படி?

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கி வரும் படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இதில் கௌதம்கார்த்திக் ஹீரோவக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகர் ராஜசேகர், நடிகை ஜீவிதா தம்பதியின் இளைய மகள் ஷிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார்.

கூட்டுக்குடும்பத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இந்தப்படத்தில்  இயக்குனர், நடிகர் சேரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  அவருடன் சரவணன், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட மிகப் பெரிய பட்டாளமே இதில் நடித்துள்ளனர்.

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் ஒரு காட்சியில் சேரன் புதிதாக கட்டிவரும் வீட்டினை பார்வையிடும்போது அவர் கீழே விழ வேண்டும். இந்தக்காட்சியின் ஒத்திகையின் போது உண்மையிலேயே கால் இடறி கீழே விழுந்தார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேரனின் தலையில் 8 தையல்கள் போடப்பட்டது.

சேரனை, மருத்துவர்கள் 3 நாட்கள் ஓய்வெடுக்கச்சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், படம் அந்தக்காட்சியுடன் முடிவடைவதால் வலியை பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்துள்ளார். அத்துடன் படக்குழுவினருக்கு ‘இதை வெளியே சொல்ல வேண்டாம். சில நாட்களுக்கு பிறகு நானே சொல்கிறேன்’ என தெரிவித்துள்ளாதாக கூறப்படுகிறது. இருந்தும் விஷயம் வெளியே கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவிற்கு பல வெள்ளிவிழா திரைப்படங்களை கொடுத்து, மரியாதை சேர்த்தவர் சேரன். விரைவில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.