தஞ்சாவூரின் பெருமை பேசும் ‘சோழநாட்டான்’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மும்பையை சேர்ந்த தமிழ் தொழிலதிபரான மாரியப்பன் முத்தையா தயாரிக்கும்  ‘சோழநாட்டான்’ திரைப்படம் திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

“பட்டுக்கோட்டை” ரஞ்சித் கண்ணா இயக்கும் ‘சோழநாட்டான்’ முழுக்க ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘உழவன் மகன்’ படத்திற்கு பிறகு ரேக்ளா ரேஸ் பின்னணியில் இப்படம் உருவாகிறது. மதுரை, திருநெல்வேலி புகழ் பாடும் எத்தனையோ படங்கள் வந்துள்ள நிலையில் சோழர்களின் தேசமான தஞ்சாவூர் மண்ணின் தனிச்சிறப்பை திரையில் பறைசாற்றும் விதமாக இந்த திரைப்படம் தயாராகிறது.

‘சோழநாட்டான்’  திரைப்படத்தில் ‘டைனோசர்ஸ்’ மற்றும் ‘ஃபேமிலி படம்’ புகழ் உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. லுத்துஃப் நாயகியாக நடிக்க, சௌந்தரராஜன் மற்றும் சுவேதா கர்ணா முக்கிய முன்னணி பாத்திரங்களை ஏற்க, நரேன், சீதா, பரணி மற்றும் விக்னேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் “பட்டுக்கோட்டை” ரஞ்சித் கண்ணா,

“தஞ்சாவூரில் தொடங்கும் இப்படத்தின் கதை சென்னையில் தொடர்கிறது. ரேக்ளா பந்தயத்தோடு நில்லாமல் மலைவாழ் மக்களின் பெரும் துயரத்தை இப்படம் தோலுரித்துக் காட்டுகிறது. ஒரு மிகப் பிரபலமான நடிகர் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அவர் யார் என்பதும் திரைப்படம் குறித்த மேலும் பல சுவாரஸ்ய தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்,” என்றார்.

செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மாரியப்பன் முத்தையா தயாரிப்பில் “பட்டுக்கோட்டை” ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் இன்று தொடங்கிய ‘சோழநாட்டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.