கோப்ரா படத்தில் எனக்கு சிக்கலான கதாபாத்திரம்! – சீயான் விக்ரம்.

‘ கடந்த சில தினங்களுக்கு முன் இதயத்தில் சின்னதாக ஒரு அசௌகரியமான உணர்வு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பி விட்டேன். அதற்குள் சமூக வலைதள பக்கத்தில் விரும்பத்தகாத விசயங்கள் நடந்தன. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும் எனக்கு நெருக்கமானவர்கள் பலர் பதறி அடித்து விசாரித்தார்கள். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நலமாக இருக்கிறேன். இதற்காகவே இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன்.  என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள் அவர்களின் ஆதரவும், ஆசியும் இருக்கும் வரை எனக்கு எதுவும் நடைபெறாது. எனக்கு 20 வயதில் விபத்து ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதன் போது காலை அகற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது, மன உறுதியுடன் போராடி, அதிலிருந்து மீண்டிருக்கிறேன். அதனால் தற்போது நடந்தவை எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை.

நான் எப்போதும் சினிமாவுக்காக தான் இருக்கிறேன். சினிமா மட்டும் தான் என் உயிர். வேறு எதுவும் எனக்குத் தெரியாது. பல ஆண்டுகளுக்கு முன் ‘சோழா டீ’ என்ற ஒரு விளம்பரத்தில் நடித்தேன். அதில் நான் ஒரு சோழராஜனாக நடித்தேன். அதற்கு திலீப் என்று ஒரு இளைஞன் இசையமைத்தார். ஆனால் இன்று அதே ஆதித்ய கரிகாலனாக, மிகப்பெரும் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கிறேன். அப்போது திலீப்பாக இருந்தவர், தற்போது ஏ ஆர் ரகுமானாக மாறி இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இருக்கிறார்.

நானும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறேன். சில தருணங்களில் நானும் ஆஸ்கார் விருதைப் பெறவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்  இதற்கு காரணம் ஏ . ஆர். ரஹ்மான் சார் தான்.  இங்கிருந்து பணியாற்றினாலும் ஆஸ்காரை வெல்லலாம் என நிரூபித்தவர். இதன் மூலம் நமக்குள் ஒரு கனவு இருந்தால்… ஒரு லட்சியம் இருந்தால்… அதற்காக கடினமாக உழைத்தால்… யாராக இருந்தாலும் மிகப் பெரிய உயரத்தை எட்ட முடியும். நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவிற்கான எல்லையைத் தொட முடியும். இதற்கு ஏ ஆர் ரகுமான் சிறந்த உதாரணம். இவர் இந்திய நாட்டின் பெருமை. வாழும் சகாப்தம். லிவிங் லெஜன்ட். அவருடைய இசைக்கு அனைவரையும் போல் நானும் ஒரு ரசிகன். அவர் ‘கோப்ரா’ படத்தில் தன்னுடைய பங்களிப்பை வழங்கியதற்காக, அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் சிக்கலான காட்சி அமைப்புகள், நுட்பமான கதாபாத்திர உணர்வுகள், இதனை ஏ ஆர் ரகுமான் அவர்களை தவிர வேறு யாராலும் இசையால் நிறைவடைய செய்ய இயலாது என இயக்குநர் அஜய் ஒவ்வொரு முறையும் என்னிடம் ரகுமானை பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார்.

தயாரிப்பாளர் லலித் குமார், எனக்கு அற்புதமான இயக்குநரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். எல்லா நடிகருக்கும் நல்லதொரு கதை அமைய வேண்டும். அதனை இயக்குவதற்கு நல்லதொரு இயக்குநர் மற்றும் குழு வேண்டும். இதனை உருவாக்கி கொடுத்த தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் முதன்முதலாக ஏற்றிருக்கும் சிக்கலான கதாபாத்திரம் இது. படத்தில் ஏழு கேரக்டர்கள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் பின்னணி பேசுவதில் வித்தியாசம் காட்ட வேண்டும் என இயக்குநரின் வேண்டுகோளை ஏற்று, நிறைய மெனக்கடல் இருந்தது. இது கதாபாத்திரங்களைப் பற்றிய கதை கிடையாது. முழுக்க முழுக்க எமோஷனலை அடிப்படையாகக் கொண்டு உருவான கதை. ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நுட்பமாக செதுக்கியிருக்கிறார். இதற்காகவே மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

ரசிகர்களின் அன்பும், ஆதரவும் இருக்கும் வரை எனக்கு எல்லாமே வெற்றியாகத்தான் அமையும். ரசிகர்கள் காட்டும் பேரன்பிற்கு பதிலளிக்க என்னிடம் வார்த்தை இல்லை. ”நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை”. என்றார்.