‘கூலி’  –  விமர்சனம்!

சன் பிக்சர்ஸ் சார்பில், கலாநிதி மாறன் தயாரித்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் கூலி. இதில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் , ஆமீர் கான், ரெபா மோனிகா ஜான் , கண்ணா ரவி, மோனிஷா பிளஸ்ஸி, காளி வெங்கட், சார்லி, ஐயப்பா பி சர்மா, ரச்சிதாராம், லொள்ளு சபா மாறன், திலீபன், இயக்குநர் தமிழ், ரிஷிகாந்த், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு க்ரிஷ் கங்காதரன், இசை அனிருத், எடிட்டிங் பிலோமின் ராஜ், சண்டைப் பயிற்சி அன்பறிவ்.

விசாகப்பட்டினத்தில் வசித்து வரும் சைன்டிஸ்ட் சத்யராஜூக்கு, ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளஸ்ஸி என மூன்று மகள்கள். சத்யராஜூம், சென்னையில் மேன்சன் நடத்திவரும் ரஜினிகாந்தும் நெருங்கிய நண்பர்கள்.

ரஜினிகாந்தின் நண்பர் சத்யராஜ் திடீரென்று இறந்து விடுகிறார். அவரது இறுதி சடங்கிற்கு செல்லும் ரஜினிகாந்த், சத்யராஜின் மரணம் இயற்கையானது அல்ல, என உணர்கிறார்.  அவர் இறப்பிற்கான காரணத்தினை தேடும் போது, சர்வதேச கடத்தல் கும்பலின் தலைவன் நாகார்ஜூனா, என தெரிய வருகிறது. அதனால், அவர்கள் கூட்டத்திற்குள்ளேயே நுழைகிறார், ரஜினிகாந்த். இதன் பின்னர் என்ன நடந்தது? என்பதை சில டிவிஸ்டுகளோடு, அதிரடி சண்டைக்காட்சிகளோடு சொல்லியிருப்பதுதான் கூலி படத்தின் கதை திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

திரையுலகில், 50 வருடங்களை கடந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனக்கே உரித்தான ஸ்டைலுடன் படம் முழுவதும் அதிரடி காட்டியிருக்கிறார். ஃப்ளாஷ்பேக் காட்சிகளில், தொழில் நுட்பத்தின் உதவியுடன் இளமையாக காட்சியளித்து, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறார். நடனக்காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் அதே ஸ்டைல்! அதே எனர்ஜி! அவருக்கும்  ஸ்ருதிஹாசனுக்கும் இடையிலான காட்சிகள் ரசிக்கத்தக்க காட்சிகள், அந்தக்காட்சிகள் கண்களில் நீர் கசியவும் செய்யும்.

எந்தவிதமான செயற்கைத்தனமுமில்லாத வில்லனாக மிரட்டியிருக்கிறார், நாகார்ஜூனா. மாஸ் அன்ட் ஸ்டைல்! மகன் கொலை செய்யப்படுவதை நேரில் பார்க்கும் போதும், அதற்காக பழி வாங்கும் போதும், தோற்றத்திலும், உடல் மொழியிலும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

நாகார்ஜுனாவின் வலது கையாக வரும், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மலையாள நடிகர் சௌபின் சாஹிர், மிரட்டியிருக்கிறார். ரஜினிகந்தை மிரட்டும் காட்சிகளிலும், நாகார்ஜுனாவின் மகனை கொல்லும் காட்சியிலும் ‘டெரர்’ காட்டியிருக்கிறார்.

சத்யராஜின் மகளாக நடித்திருக்கும் ஸ்ருதிஹாசன், நடித்த அத்தனை காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸில் கண்களை கசிய வைத்துவிடுகிறார்.

ரஜினிகாந்தின் நண்பராக நடித்திருக்கும் சத்யராஜின் கதாபாத்திரம் அழுத்தமாக எழுதப்படவில்லை. அதனால் அவரது நடிப்பும் எடுபடவில்லை.

கன்னட நடிகை ரச்சிதாராம், தனிப்பட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களை எளிதில் கவர்ந்திழுக்கிறார்.

நாகார்ஜுனாவின் சாம்ராஜ்யத்தின் தளபதியாக நடித்திருக்கும் சௌபின் ஷாஹிர், அனைத்து நடிகர்களையும் ஓரங்கட்டியிருக்கிறார், என்றே சொல்ல வேண்டும். அவரது தனிப்பட்ட நடிப்பு அனைவரையும் எளிதில் கவர்ந்து விடுகிறது. குறிப்பாக நாகார்ஜுனாவின் மகனை கொலை செய்யும் காட்சியில் மிரள வைக்கிறார்.

காளி வெங்கட், கண்ணா ரவி, சார்லி, ரெபா மோனிகா ஜான்  ,மோனிஷா பிளஸ்ஸி, ஐயப்பா பி சர்மா, ரச்சிதாராம், லொள்ளு சபா மாறன், திலீபன், தமிழ், ரிஷிகாந்த், பூஜா ஹெக்டே என பலரும் அவரவர் கதாபாத்திற்கேற்றபடி நடித்துள்ளனர்.

படத்தின் பெரும் பலமாக இசையும் ஒளிப்பதிவும் இருக்கிறது. ஹார்பர் மற்றும் அதன் சுற்றுப்புறம். கப்பலில் ரஜினிகாந்திற்கும் நாகார்ஜுனாவுக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சி, மேன்சனில் உபேந்திரா – ரஜினிகாந்த் சண்டைக்கட்சிகளை ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அப்பா மகள் பாசம், நண்பர்களின் நேசம், தொழிலாளர்களின் காவலன், கடத்தல் கும்பல் இந்த அயிட்டங்களை ஒன்று சேர்த்து, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ரஜினியின் மேஜிக்கை கலந்து அவரது ரசிகர்களுக்கு தனது வழக்கமான ஃபார்முலா மூலம் கொடுத்திருக்கிறார்.

படத்தின் முதல் அரை மணி நேரம்போல் மொத்தப்படத்தினையும் இயக்கியிருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்.