நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ‘சாக்யா’ சார்பில் நிவாரண பொருட்கள் உதவி.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுநோயால் ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.   தமிழகத்தில் 144 தடை உத்தரவால் நாட்டுப்புறக் கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கலைஞர்களுக்கு மாசி முதல் ஆவணி மாதம் வரையிலான காலம் மட்டுமே கலைத் தொழில் வாய்ப்புகள் என்பதால் அவற்றில் இருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டே அடுத்த ஆறு மாத காலத்திற்கு வாழ வேண்டிய நிலை உண்டு.  இச்சூழலில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கான வாய்ப்பும் இன்றி அவதிக்கு உள்ளாகி இருக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான நிவாரணப் பொருட்கள் சாக்யா அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. 

பேராசிரியர்கள் மற்றும் நண்பர்களின் வழி நன்கொடைகளைத் திரட்டி அவற்றிலிருந்து நிவாரணப் பொருட்களை வாங்கி நாட்டுப்புறக் கலைஞர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அறக்கட்டளையின் மூலம் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். 

மதுரை மாவட்டத்தில் மாத்தூர், குருத்தூர், மாங்குளம் மற்றும் பனையூர் பகுதியைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், லட்சுமிபுரம், கீழப்பனங்காடி பகுதியைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்களுக்கும் என 50 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. 

மீனாட்சிபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் பாண்டீஸ்வரி சேவகன்

சாக்யா அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சே. செந்திலிங்கம் தப்பாட்டம், நையாண்டி மேளம், கைவினைக் கலைஞர்கள், மாடாட்டம் மற்றும் கிராமிய பாடகர்கள் உள்ளிட்ட கலைஞர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி, நன்கொடைகள் அளித்து உதவிய கொடை யாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  மேலும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திருநங்கைகள், பழங்குடிகள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு வாய்ப்பு உள்ளவர்கள் தங்களால் இயன்றளவு உதவிகளை செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்வில் ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்ததாண்டவம், மீனாட்சிபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் பாண்டீஸ்வரி சேவகன், சாக்யா அறக்கட்டளையின் அறங்காவலர் சே.மலர்க்கொடி, முதன்மை ஒருங்கிணைப்பாளர் ராதிகா மற்றும் சமூக சேவகர்கள் அர்ஜுன் ராஜ், கோபிநாத் ஆகியோர் உடனிருந்து நிவாரணப் பொருட்களை வழங்கினர்.