டாடா – விமர்சனம்!

கவினும், அபர்ணாதாஸூம் ஒரே கல்லூரியில் படித்துவரும் காதலர்கள். இவர்களுக்கிடையே நெருக்கம் அதிகமானதன் விளைவாக, அபர்ணாதாஸ் கர்ப்பமடைகிறார். கர்ப்பத்தை கலைத்துவிட கவின், அபர்ணாதாஸை நிர்பந்திக்கிறார். அதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கும் அபர்ணாதாஸ். எனவே இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்கின்றனர். நண்பனின் உதவியுடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் அவர்களுக்குள் வறுமையின் காரணமாக பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த நிலையில் அபர்ணாதாஸூக்கு குழந்தை பிறக்கிறது. பரபரப்புடனும், ஆசையுடனும் ஆஸ்பத்திரிக்கு வரும் கவின், பலத்த அதிர்ச்சியடைகிறார். அது என்ன? என்பது தான், டாடா படத்தின் ஃப்ரெஷ்ஷான, பியூட்டிஃபுல் எமோஷனல் லவ் ஸ்டோரி!

கதைக்கேற்றபடி கதாபாத்திரங்களின் வடிவைமைப்பும், அதற்கேற்ற நடிகர்களின் பங்களிப்பும் டாடா படத்தின் வெற்றியை நிர்ணயம் செய்து விடுகிறது.

கவின் கலகலப்பான கல்லூரி மாணவனாகவும், அப்பாவாகவும் இருவேறு மாறுபட்ட நடிப்பினை கொடுத்து ரசிகர்களின் மனதில் எளிதாக இடம்பிடித்து விடுகிறார். பல காட்சிகளில் அவரது நடிப்பு அந்த கதாபாத்திரத்தின் மீதான  ரசனையையும், பரிதாபத்தினையும் ஏற்படுத்துகிறது. படம் முழுவதும் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். டாடா படத்தின் மூலம் கவினுக்கு ரசிகைகள் எண்ணிக்கை அதிகமாகும். இந்த படத்தின் மூலம் தனது இருப்பினை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

அபர்ணாதாஸ் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடித்துள்ளார். க்ளைமாக்ஸில் எல்லோரையும் உருக வைத்து விடுகிறார்.

எமோஷனலான காட்சிகளில் கவினின்  நண்பராக  நடித்திருக்கும்  பிரதீப், விடிவி கணேஷ் இருவரும் சிரிக்க வைத்து, ரிலாக்ஸ் பண்ணி விடுகின்றனர். அதிலும் விடிவி கணேஷின் இன்ட்ரோ சீன் மாஸ்! தியேட்டர் அதிரும் சிரிப்பு சத்தம்!

ஒரு சில காட்சிகள் தான் என்றாலும் பாக்யராஜ்,  ஐஸ்வர்யா,  ஹரிஷ்,  கமல்,  குழந்தை நட்சத்திரம் இலன் உள்ளிட்டோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

எழிலரசனின்  ஒளிப்பதிவும், ஜென் மார்ட்டினின்  இசையும் படத்தின் மற்றொரு பலமாக இருக்கிறது.

யூகிக்க கூடிய கதையாக இருந்தாலும் சற்றே வித்தியாசமான திரைக்கதை மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இயக்குனர் கணேஷ் கே பாபு.