’18 Reels’ நிறுவனம் சார்பில் எஸ்.பி.சௌத்ரி தயாரித்துள்ள படம், ‘டகால்ட்டி’. ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஜய் ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார்.
சந்தானம், ரித்திகா சென், ராதாரவி, யோகி பாபு, தருண் அரோரா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டகால்டி’ எப்படி இருக்கிறது.
மும்பையின் மிகப்பெரும் கோடீஸ்வர தொழிலதிபர் தருண் அரோரா. தன்னுடைய கற்பனையின் மூலமாக வரைந்த பெண்களை தேடிப்பிடித்து அவர்களுடன் உறவு கொள்வது அவரின் பொழுதுபோக்கு.
வழக்கம்போல் ஒரு பெண்ணின் உருவத்தை வரையும் தருண் அரோரா, அந்த பெண்ணை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் நிர்ணயிக்கிறார். மும்பை தாதா ராதாரவி சந்தானத்தின் உதவியுடன் அந்த பெண்ணை கண்டுபிடிக்கிறார். அதன் பிறகு நடக்கும் சுவாரஷ்யமான சம்பவங்களே ‘டகால்ட்டி’.
சந்தானம் மெலிந்த நிலையில் தோற்றமளிக்கிறார். வழக்கமான அவருடைய சுறுசுறுப்பு மிஸ்ஸிங்! இருந்தாலும் சண்டைக்காட்சிகளில் அசரடிக்கிறார். சந்தானம் ,யோகி பாபு இருவரும் சேர்ந்து ஒரு காமெடி தர்பாரே நடத்திருக்க வேண்டும். தவற விட்டிருக்கிறார்கள்.
க்ளைமாக்ஸில் என்ட்ரி கொடுக்கும் தெலுங்கு திரையுலகின் நகைச்சுவை மன்னன் பிரம்மாணந்தம் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார். அவருடன் யோகி பாபுவும் சேர்ந்து கொள்ள ரசிகர்களுக்கு காமெடி விருந்து.
திரைப்படங்களுக்கு லாஜிக் தேவையில்லாவிட்டாலும் ஒரு வரைமுறை இல்லாமல் இருப்பதால் காட்சிகளை ரசிக்க முடியவில்லை.
கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் ரித்திகா சென் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை! இவருக்கும் சந்தானத்திற்குமான காதல் காட்சிகளும் பெரிதாக கவனம் பெறவில்லை.
மும்பை தாதா கதாபாத்திரத்திற்கு ராதாரவி கச்சிதம். வித்தியாசமான நடை, பாவனை. இயக்குனர்கள் பயண்படுத்திக் கொள்ள வேண்டிய நல்ல நடிகர்.
காதல், பாடல், காமெடிக் காட்சிகளில் இன்னும் கவனம் சேர்த்திருந்தால் சந்தானத்தின் சமீபத்திய வெற்றிப் படங்களான தில்லுக்கு துட்டு, A1 போன்ற படங்கள் போல் ஒரு படமாக வந்திருக்கும். டைம் இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்,