‘டப்பாங்குத்து’ – விமர்சனம்!

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும்,தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் பல சம்பவங்களை, கற்பனை கலந்து சொல்லியிருப்பது தான், டப்பாங்குத்து. இதில் சங்கர பாண்டி, தீப்தி, துர்கா, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர். முத்துவீரா இயக்கியிருக்கிறார்.

பரம்பரை, பரம்பரையாக தெருக்கூத்து ஆடி வரும் குடும்பத்தில், நாயகன் சங்கரபாண்டியும் புகழ்மிக்க கலைஞராக இருந்து வருகிறார். அம்மா வேறு ஒருவருடன் ஓடிவிட்ட நிலையில், அப்பா யாரென்றே தெரியாத தீப்தி, இவரது குழுவில் முதல் முறையாக ஆட வருகிறார். சங்கர பாண்டியும், தீப்தியும் காதலிக்கின்றனர். அம்மாவை தேடிபிடிக்க சங்கர பாண்டியின் உதவியை நாடுகிறார், தீப்தி. இந்நிலையில் சங்கர பாண்டியின் மாமா, தீப்தி ஆடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘டப்பாங்குத்து’.

முழுக்க, முழுக்க தெருக்கூத்து கலைகளை பின்னணியாக கொண்டு, பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலமாக திரைக்கதை அமைத்து, சில கமர்ஷியல் அயிட்டங்களோடு இயக்கியிருக்கிறார், இயக்குநர் ஆர். முத்துவீரா.

சின்னத்திரை தொடர் நடிகர் சங்கர பாண்டி, ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், டப்பாங்குத்து திரைப்படத்தில் முதல் முறை நாயகனாக நடித்திருக்கிறார். தெருக்கூத்து கலைஞராக நடனத்தில் சில சிரமங்கள் இருந்தாலும், நடிப்பதில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அவரது வசன உச்சரிப்பு கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது. கதையில் நிகழ்ந்த திருப்பங்களை ‘கொல சாமி’ பாட்டு மூலமாக சொல்லியிருப்பது வித்தியாசமாகவும், ரசிக்கும்படியும் இருக்கிறது..

கதையின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி தீப்தி, அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். சங்கர பாண்டியனுடன் இணைந்து நடனமாடும் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். க்ளைமாக்ஸில், தன்னுடைய அம்மா, அப்பா ஆகியோர் யாரென்ற ரகசியம் வெளிப்படும்போது, உணர்ச்சி வசப்பட்டு ஆடும் காட்சியில் சிறப்பாக நடித்து உருக வைத்து விடுகிறார்.

சங்கர பாண்டியனின் குழுவில் ஆடும் துர்கா, மிகச்சிறப்பான நடனத்தை கொடுத்திருக்கிறார். அவரது நடன அசைவுகள் அப்படியே நிஜக்கலைஞர்களை நினைவு படுத்துகிறது.

தெருக்கூத்து நடனக் குழுவின் பஃபூன் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் ‘காதல்’ சுகுமார், படம் முழுவதுமாக பயணித்திருக்கிறார். நாயகன், நாயகியை விட தனித்து நிற்கிறார். பஃபூன் கதாபாத்திரத்தினை நன்கு உணர்ந்து சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது சேஷ்டைகள் சில ரசிக்கவைக்கிறது.

வில்லனாக, சங்கர பாண்டியனின் மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர், கன்னிகளை வேட்டையாடும் தொழிலதிபர் பூபதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மற்றும் சங்கர பாண்டியனின் அம்மா, தீப்தியின் வளர்ப்பு தாய், திருநங்கை நடிகர்கள் என, நடித்திருப்பவர்கள் சில இடங்களில் மிகையான நடிப்பினை கொடுத்துள்ளனர். மற்றபடி,  கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சரவணன், இசையமைப்பு படத்தின் பலம். தமிழகம் முழுக்க ஓடுகின்ற ஆறுகளை பற்றிய பாடல் சிறப்பு. பாடலாசிரியர் பாராட்டப்பட வேண்டியவர்.

ஒளிப்பதிவு, ராஜா கே.பக்தவச்சலம். படத்தின் ஆரம்பக்காட்சிகள் சில அவுட் ஆஃப் ஃபோகஸில் இருக்கிறது. அடுத்தடுத்த காட்சிகள் சரியாக இருக்கிறது.

அமெச்சூராக படமாக்கப்பட்டிருந்தாலும், ‘டப்பாங்குத்து’ படத்தின் மூலமாக தெருக்கூத்து கலையையும், கலைஞர்களையும் பெருமை படுத்தியிருக்கிறார், இயக்குநர் முத்துவீரா.